×

உடல்நல பிரச்சினை காரணமாக பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே!: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

டோக்கியோ: உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக பெருங்குடல் அலற்சி நோயால் பாதிக்கப்பட்டு வரும் ஷின்சோ அபேயின் உடல்நிலை சமீப காலமாக மோசமடைந்திருந்தது. அடுத்தடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷின்சோ அபே, பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எனது உடல் நலக்குறைபாடு மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சை எதிரொலியாக என்னால் சரிவர பணியாற்ற முடியவில்லை. எனது உடல் நலக்குறைவால் பிரதமரின் அரசியல் செயல்பாடுகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுவிடக்கூடாது.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதால் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளேன். எனவே ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டார். தமது உடல்நிலை பாதிப்பு எதிரொலியாக அரசுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கவே ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். 65 வயதாகும் அபே, ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர். பதவி காலம் முடிவடைய இன்னும் 1 ஆண்டு இருக்கும் நிலையில், அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஷின்சோ அபே பதவி விலகி இருக்கும் நிலையில், இடைக்கால பிரதமராக துணை பிரதமர் டாரோ அஸோ அல்லது அமைச்சரவை செயலாளர் யோஷிஹைட் சுகா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Shinzo Abe ,Japanese ,announcement , Japanese, PM Shinzo Abe, resigns , health issues
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்