×

பரமக்குடி அருகே கனரா வங்கியில் அடகு வைக்கப்பட்ட 300 சவரன் நகைகள் கையாடல்!: வங்கி நகை மதிப்பீட்டாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே கனரா வங்கியில் அடகு வைக்கப்பட்ட 300 சவரன் நகைகள் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பரமக்குடி அருகே மீஞ்சூர் கனரா வங்கியில் அடகு வைக்கப்பட்ட 300 சவரன் நகைகளை திருடிய நகை மதிப்பீட்டாளர் மணிகண்டன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மீஞ்சூர் என்ற கிராமத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக கனரா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் ஏராளமான விவசாயிகள் தங்களுடைய நகைகளை அடகு வைத்து விவசாய கடன் பெற்று வந்தனர்.

கடந்த 1 மாதமாக விவசாயிகள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திருப்புவதற்காக வந்த போது அங்கு நகை கணக்கீட்டாளராக பணிபுரியக்கூடிய மணிகண்டன் என்பவர் நகைகளை திருப்பி அளிக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து நகை மதிப்பீட்டாளர் மணிகண்டன் வங்கியில் அடகு வைத்த நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மணிகண்டனை வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருடப்பட்ட நகைகளை ஒப்படைப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என வங்கி சார்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்க மறுத்து வாடிக்கையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திருடிய நகை மதிப்பீட்டாளர் மணிகண்டன்  என்பவர் மீது மாவட்ட குற்றவியல் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் மணி நகரை சேர்ந்த மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில் 44 லட்சம் மதிப்புள்ள 300 சவரன் திருடப்பட்டது தெரியவந்தது. மணிகண்டனை பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்துள்ளது.

Tags : jewelery ,Canara Bank ,Paramakudi ,bank jewelery appraiser , Manipulation , 300 shaving jewelery pawned , Canara Bank, Police file case against,bank jewelery appraiser .. !!
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...