×

ஜப்பானிய மக்களுக்கு சேவை செய்யும் திறனில் தன்னம்பிக்கையை நான் இழந்துவிட்டேன் :பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷின்சோ அபே வேதனை!!!

டோக்கியோ : ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது மோசமான ஆரோக்கியத்தால் அரசு வேலைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் இந்த முடிவை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ நீண்ட காலமாக குடல் வீக்கம் மற்றும் அல்சர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு வயது 65. சமீப நாட்களில் இவர் மருத்துவமானைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சுமார் எட்டு மணி நேரம் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

 ஜப்பானில் அதிக ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமை ஷின்சோவுக்கு உண்டு. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் திறமையாக செயல்படவில்லை என்ற கருத்து ஜப்பானில் ஷின்சோவுக்கு எதிராக கிளம்பியுள்ளது. நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஷின்சோ அதிகமாக செலவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மீடியாக்களில் செய்தி வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஷின்சோ அபே தாம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பதவி விலகல் குறித்து மேலும் பேசிய ஷின்சோ அபே, ஜப்பானில் கொரோனாவை கட்டுப்படுவதில் நான் தோல்வி அடைந்ததே என்னை ராஜினாமா செய்ய தூண்டியது. அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை நான் பதவியில் நீடிப்பேன். அடுத்த பிரதமர் யாராக இருக்க வேண்டும் என்ற எனது கருத்தை தெரிவிக்க நான் விரும்பவில்லை. நான் பதவியில் இருந்து விலகுவதால், உடல்நலக்குறைவால் ஏற்படும் தலைமை வெற்றிடம் தவிர்க்கப்படும். ஜப்பானிய மக்களுக்கு சேவை செய்யும் திறனில் தன்னம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். எதிர்வரும் நாட்களில் நான் என் நோய்க்கு புதிய சிகிச்சையை மேற்கொள்ள உள்ளேன். ஆனால் அதற்கு நீண்டகால பராமரிப்பு தேவை. உடல்நிலை மோசமடைவதை கடந்த ஜூலை மாதத்தில் உணரத் தொடங்கினேன்,என்றார்.


Tags : Japanese ,Shinzo Abe , Japan, people, service, self-confidence, Prime Minister, Shinzo Abe, pain
× RELATED ஜப்பானிய இயக்குனரின் கடைசி படம் விரைவில் இந்தியாவில் வெளியாகிறது