×

நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மேற்கு வங்கம், பஞ்சாப், ஜார்க்கண்ட் உட்பட 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்!!

டெல்லி : நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மேற்கு வங்கம், பஞ்சாப் உட்பட 6 மாநிலங்களின் அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் 6 அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று கடந்த 17ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு வரும் திங்கட்க்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

செப்டம்பரில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள்

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை என்ற அமைப்பு தனியாக உருவாக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய் தொற்று காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வை வரும் செப்டம்பர் 13ம் தேதியும், அதேப்போல் ஜே.இ.இ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடத்தப்படும் என கடந்த மாதம் தேர்வு முகமை அமைப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மனு

இந்த நிலையில் கேரளா உட்பட நாடு முழுவதிலும் உள்ள 11 மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, கொரோனா நோய் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்த பிறகு தேர்வை நடத்த வேண்டும். மேலும் இதுகுறித்து கடந்த ஜூலை 3ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையையும் ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.’’ என குறிப்பிட்டிருந்தனர்.

அனைத்து மனுக்களும் தள்ளுபடி

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அதில், எந்த ஒரு நிலையிலும் வாழ்க்கையின் ஓட்டத்தோடு நாம் பயணிக்க தயாராக இருக்க வேண்டும். தேர்வு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு செய்வது என்பது மாணவர்களின் எதிர்காலத்தை கண்டிப்பாக பாதிக்கும் என்பதால், நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்து, மாணர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

பிரதமர் மோடிக்கு கடிதம்

இந்த நிலையில்  மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜக மூத்த தலைவா சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் நீட், தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை கடிதம்  அனுப்பியுள்ளார். இருப்பினும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மேலும் தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இதனிடையே நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுடன் காங். இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனையும் மேற்கொண்டார். அதே போல் நீட் ,ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஒடிசா மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அதே வேளையில் நாடு முழுவதும் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : states ,cancellation ,Jharkhand ,Punjab ,Supreme Court ,West Bengal , NEET, JEE, West Bengal, Jharkhand, Maharashtra, Punjab, Rajasthan, Chhattisgarh, States, Review, Petition
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்