×

பெரியாறு கால்வாயில் சுத்தப்படுத்தும் பணி ‘சுமார்’ : விவசாயிகள் புகார்

அலங்காநல்லூர்:  விரைவில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவுள்ள நிலையில் மதுரை வைகை- பெரியாறு கால்வாயில்  சுத்தப்படுத்தும் பணி ஓரளவிற்கே நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். பெரியாறு அணையில் 130 அடியும், வைகை அணையில் 57 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. மதுரை மாவட்டம், பேரணை முதல் கள்ளந்திரி வரை  முதல்போக சாகுபடிக்கான காலகட்டம் கடந்து விட்ட நிலையில் ஒரே போகத்திற்காக 5 மாதங்கள் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என  விவசாயிகள் அரசுக்கும், பொதுப்பணி துறைக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அரசின் பரிசீலனைக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி, தண்ணீர்  திறப்ப தேதியை தெரிவிக்க வேண்டி பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் பொதுப்பணி துறையினர் வைகை பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து பாசனத்திற்கு செல்லக்கூடிய பிரிவு கால்வாய்களை  சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொண்டையம்பட்டி, புதுப்பட்டி, குமாரம், பாசிங்காபுரம், அதலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும்  நீர்வரத்து கால்வாய்களும், கிளை வாய்க்காலும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதில் கிளை வாய்க்கால்கள் பல்வேறு இடங்களில் உடைந்த நிலையிலும், குடியிருப்பு பகுதிகளில் உள்ளவை குப்பைகளுடன் கழிவுநீரும் நிரம்பி  கிடக்கிறது. இவற்றை பொதுப்பணி துறையினர் ஓரளவிற்கே அகற்றியுள்ளதாகவும், இதனால் வாய்க்கால்கள் சேறும், சகதியுமாக பிளாஸ்டிக்  பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது என  விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பாசன விவசாயிகள் கூறுகையில், ‘தண்ணீர் வரத்து உள்ள போதும் சரி, இல்லாத போதும் சரி பொதுமக்கள் இந்த கிளை வாய்க்கால்களை  குப்பை தொட்டி போல் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுத்திட அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். பொதுப்பணி  துறையினர் தண்ணீர் வரத்து இல்லாத காலங்களில் 100 நாள் பணியில் நீர்வரத்து கால்வாய்களையும், கிளை வாய்க்கால்களையும் தூர்வார ஊராட்சி  நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் கால்வாய் கரையில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் தண்ணீர் வரும் காலங்களில் மட்டும் கண்துடைப்பு வேலைகளை தவிர்த்து நிரந்தரமாக பாசன கால்வாயை சீரமைக்க முன்வர வேண்டும்’  என்றனர்.தண்ணீர் வரத்து உள்ள போதும் சரி, இல்லாத போதும் சரி பொதுமக்கள் இந்த கிளை வாய்க்கால்களை குப்பை தொட்டி போல் பயன்படுத்தி  வருகின்றனர்.


Tags : canal ,Periyar , Periyar, canal,work, 'approx'
× RELATED தென்கரை வாய்க்கால் புதிய பாலம்...