×

திட்டமிடாத பாதாள சாக்கடை பணிகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருப்பூர்: திருப்பூர், மாநகரப்பகுதியில் திட்டமிடாமல் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை பணிகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி  வருகின்றனர்.
பின்னலாடை நகரம் என அழைக்கப்படும் திருப்பூர் கடந்த 2009ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் இருந்து புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 11  ஆண்டுகளாகியும் திருப்பூர் மாவட்டத்திற்கான உரிய கட்டமைப்பு வசதிகளை இதுவரை பெறவில்லை. மாநகரப்பகுதியில் சாலை வசதிகள், குடிநீர்  வசதி மற்றும் சாக்கடை வசதிகள் என எந்த அடிப்படை வசதிகளும் பொதுமக்கள் கிடைப்பதில்லை. இதனால், திருப்பூர் மாநகரில் தினமும்  போராட்டங்களும், சாலை மறியலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகரப்பகுதியில் சாலைகள் மேம்படுத்தும் விதமாக  பிரதான சாலைகளான திருப்பூர், காங்கயம் ரோடு, அவிநாசி ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட சாலைகளிலும், சிறிய சாலைகளிலும்  பாதாள சாக்கடைகள் திட்டம் பல கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்திட்டம் துவக்கம் முதலே, திட்டமிடல் இல்லாமல் பணிகளை மேற்கொள்வதால், மக்கள் நரக வேதனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருப்பூர், மாநகரில்  பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்கு குழிகளை தோண்டினால் முறையாக மூடுவது கிடையாது. மேலும், தார் ரோடுகளை தோண்டினால் வெறும்  மண்ணை கொண்டு மூடி செல்கின்றனர். இதனால், ரோடுகளில் மண் நிறைந்து வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து கை, கால்களை இழக்கும்  நிலை ஏற்படுகிறது. இதனால், காலை மாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து  நெரிசலும் ஏற்படுகின்றன. மேலும், குழிகளில் இருந்து, ‘நீர் ஊற்று’ போல கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால், பல லட்சம் ரூபாய் செலவில்  புதியதாக போடப்பட்ட ரோடுகள் சேதமடைந்து வருகிறது. இதுகுறித்து, திருவள்ளுவர் வீதி பகுதி பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூர், காலேஜ் ரோடு பகுதியில் இருந்து குமார் நகர், அவினாசி ரோடு, பி.என்  ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு பொதுமக்கள் பெரும்பாலும் இவ்வழியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், எங்கள் பகுதியில் 20 க்கும்  மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இதில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால், இந்த வழி  குறுகிய பாதையாகும். இத்தகைய சூழ்நிலையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்ய குழி தோண்டினால் அதனை மாநகராட்சி நிர்வாகம் முறையாக  மூடாமல் விட்டு செல்கின்றனர். பின்னர், அங்கு தார் சாலையும் அமைக்கப்படுவது இல்லை. இதனால், வேலைக்கு செல்லும் நேரத்தில் கடுமையாக  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் நாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு  ஆளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதன் மீது மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை சுத்தம் செய்த பின்பு  உடனடியாக நல்ல முறையில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.புட்நோட்: திருப்பூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் முறையாக பாதாள சாக்கடை மூடப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி  வருகின்றனர்.

Tags : Motorists , Unplanned, Motorists ,sewerage, works
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...