×

ரிஷிவந்தியம் அருகே முதுமக்கள் தாழி ஓடுகள் கண்டெடுப்பு

ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் வனப்பகுதியில் மிகப்பழமையான முதுமக்கள் தாழி ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.ரிஷிவந்தியம் - தியாகதுருகம் செல்லும் பிரதான சாலையிலிருந்து கிழக்கு நோக்கி 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தைல மரக்காட்டில்  செட்டிகுளத்தின் அருகில் செம்மண் மேட்டில் சிதைந்த நிலையில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இத்தாழிகளில் எலும்புகள் மற்றும் பற்கள்  கிடைத்தன.இதுகுறித்து ரிஷிவந்தியம் பண்பாடு, கலை மற்றும் தொல்லியல் மீட்பு பேரவை ஒருங்கிணைப்பாளரும் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி  மாணவருமான சுரேஷ் மணிவண்ணன் கூறியதாவது: பண்டைய காலங்களில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த முதியவர்களை அகண்ட  வாய்பகுதி கொண்ட பெரிய அளவிலான சுடப்பட்ட மண் தாழியில் அமர வைத்து, அவருக்கு விருப்பமான பொருட்களுடன் சேர்த்து புதைக்கும் வழக்கம்  இருந்தது. பொதுவாக இது ஆற்றங்கரை ஓரத்தில் தான் கிடைக்கும்.

ஆனால் ஆறு இல்லாத ரிஷிவந்தியம் பகுதியில் கிடைத்துள்ளது ஆச்சரியமாக  உள்ளது. தடிமனான, சற்று தடிமன் குறைவாக, மெல்லியதாக என பல்வேறு அளவுகளில் ஓடுகள் கிடைத்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய  மக்கள் வாழ்ந்த வாழ்விடப் பகுதியாகக் காணப்படுவதால்,  இதன் வரலாற்று காலத்தை நிர்ணயம் செய்ய ஆய்வு மேற்கொள்ள தாத்தா ரெட்டமலையார்  தமிழ்ச்சங்கம் மற்றும் ரிஷிவந்தியம் பண்பாடு, கலை மற்றும் தொல்லியல் மீட்பு பேரவை பொறுப்பாளர்கள் ஆனந்தகுமார், பிரவீன், சுகனேஷ் ஆகியோர்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Rishivandiyam , Discovery , elderly ,mini, Rishivandiyam
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்...