×

கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களை 2வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்: பா.ஜ. மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி

கோபி:  கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என பா.ஜ. மாநில துணைத்தலைவர் வானதி  சீனிவாசன் கூறினார்.கோபியில் பா.ஜ. கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் அஜித்குமார் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி  விநாயகம், ஊடக பிரிவு முனுசாமி, மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், அமைப்பு சாரா மாவட்ட தலைவர் ரமேஸ், செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட  பொதுச்செயலாளர் வித்யாரமேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ. மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன்  கூறியதாவது:சட்டமன்ற தேர்தலுக்கான பணியை பா.ஜ. தொடங்கிவிட்டது. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது.  கொரோனா தொற்று அதிகரித்து வரும் அதே வேளையில், தொற்றில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சென்னையைபோல் மாநிலம் முழுவதும் தனி மருந்து பெட்டகம் வழங்க வேண்டும். மத்திய அரசு ரூ.6600 கோடியை மாநில அரசுக்கு வழங்கி உள்ளது.  அதேபோல், ஜி.எஸ்.டி. வரி வருவாயையும் வழங்கி உள்ளது. தமிழக அரசு தகுந்த மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும்.தமிழக முதல்வர் நீட் தேர்வை, கொரோனா கட்டுக்குள் வந்த பின் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், மற்ற மாநிலங்களில்  இருந்து தேர்வு வைக்க கோரிக்கை வைத்துள்ளதால் தேர்வு நடத்தப்படும் என மத்திய  கல்வி அமைச்சகம் கூறி உள்ளது. தமிழகத்தில் நோய் தன்மை எந்த அளவில் உள்ளது என்பதை பா.ஜ. ஆய்வு செய்து மத்திய அரசுக்கு தெரிவிக்கும். எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமல்ல  11 மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதியும், நிதியையும் வழங்கி உள்ளது. மாநில அரசுதான் மற்ற முயற்சிகளை எடுக்க வேண்டும்.

தேசிய கல்வி கொள்கையில் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுமே ஒரே நிலைப்பாடில்தான் உள்ளது. அ.தி.மு.க. அரசு மும்மொழி கொள்கை  விஷயத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் மாநிலத்தை தனித்து ஆள வேண்டும் என்ற கனவு உள்ளது.  அந்த கனவு எங்களுக்கும் உள்ளது. ஆனால், கூட்டணி தர்மத்தை நாங்கள் மதிக்கிறோம்.சென்னையில் அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்காமல் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக கிடைக்க வேண்டும். தென் தமிழகம், மேற்கு  தமிழகம் என அனைத்து பகுதிகளும் வளர வேண்டும். கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களை 2வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்.

மும்மொழி கொள்கையை எதிர்ப்பவர்கள், தாய்மொழியில் தான் 5ம் வகுப்பு வரை கற்க வேண்டும் என்ற கருத்து குறித்து கூற மறுப்பது ஏன்? நமது  குழந்தைகளை தமிழ் மொழியில் படிக்க வைப்பது தான் தமிழுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவமாகும். இந்திதான் படிக்க வேண்டும் என  வற்புறுத்தவில்லை. ஏதாவது ஒரு மூன்றாவது மொழியை கற்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம். தேர்தலில் தனித்து போட்டியா? அல்லது  கூட்டணியா?  என்பது குறித்து தலைமைதான் முடிவெடுக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vanathi Srinivasan ,cities ,capital ,Interview ,BJP ,Coimbatore , Major , capital, BJP,Vanathi Srinivasan
× RELATED ராமசீனிவாசனால் வானதி டென்ஷன்: அதிமுக வேட்பாளருக்கு சாபம்