×

குறிச்சி பாளையங்கால்வாயில் பாதுகாப்பற்ற பாலம் சீரமைக்கப்படுமா?

நெல்லை:  மேலப்பாளையம் குறிச்சி பாளையங்கால்வாயில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  எதிர்பார்க்கின்றனர். மேலப்பாளையம் குறிச்சி 30வது வார்டு பகுதியில் பாளையங்கால்வாயை கடந்து அக்ரஹாரம் செல்ல தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம்  அமைக்கப்பட்டு பல ஆண்டுகளை கடந்துவிட்டது. பாலத்தில் பாதுகாப்பு சுவர் இல்லாத நிலையில் காணப்படுகிறது. அருகிலுள்ள அக்ரஹாரத்தில் இருந்து பாலத்தை கடந்துதான் பிள்ளையார் கோயில் தெரு, முத்தாரம்மன் கோயில், சாந்தமூர்த்தி தெரு பகுதிகளுக்கு  செல்ல வேண்டும். மேலும் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் மேல்நிலைபள்ளிக்கு பாதுகாப்பு தடுப்பு சுவர் இல்லாத பாளையங்கால்வாய்  பாலத்தை கடந்துதான் மாணவ, மாணவிகள் செல்ல வேண்டும். மேலப்பாளையம் மெயின்ரோடு வழியாக செல்ல வேண்டும் என்றால் வாகன  போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

எனவே பாளையங்கால்வாய் பாலத்தை கடந்தே மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். அருகிலுள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள்  வாங்கவும் இவ்வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. கால்வாயில் தண்ணீர் அதிகளவு செல்லும்போதும், காற்று பலமாக வீசும்  போதும் தரைமட்ட பாலத்தில் பாதுகாப்பு சுவர் இல்லாத நிலையில் தவறி தண்ணீரில் விழும் நிலை காணப்படுகிறது. இதனை தவிர்க்க பாலத்தை  உயர்த்தி பாதுகாப்பு சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : bridge ,Kurichi Palayankalvai , Will ,unsafe ,bridge ,repaired?
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...