×

சேலம் வெள்ளி வியாபாரிகளுக்கு ஓணம் ஆர்டர் இல்லாததால் 300 கோடி வருவாய் இழப்பு: ஊரடங்கை தளர்த்த வலியுறுத்தல்

சேலம்: கேரளாவில் இருந்து ஓணம் பண்டிகையையொட்டி வழக்கமான ஆர்டர் வராததால் 300 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று  சேலம் வெள்ளி வியாபாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். பல்லாயிரம் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம்  ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் இளம் பெண்கள்  லைட் வெயிட் கொலுசு, அனார்கலி, குஷ்பூ, மேனகா உள்ளிட்ட கொலுசு வகைகளை வாங்கி அணிவார்கள். இதற்காக 15 நாட்களுக்கு முன்பே  சேலத்தில் இருந்து கேரளாவின் பல பகுதிகளுக்கு கால் கொலுசுக்கள் அனுப்பி வைக்கப்படும். அதேபோல் அரைஞாண் கொடி மற்றும் மெட்டி,  குங்குமச்சிமிழ், வெள்ளி டம்ளர் உள்ளிட்டவைகள் விற்பனைக்கு அனுப்பப்படும்.
நடப்பாண்டு ெகாரோனா தொற்று காரணமாக கேரளாவில் பல கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. கேரளாவில் ஊரடங்கு அமல் தொடர்வதால்  நடப்பாண்டு ஓணம் பண்டிகைக்கு வரவேண்டிய வெள்ளி ஆர்டர்கள் வரவில்லை என்று சேலம் வெள்ளி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்திலேயே சேலத்தில் தான் வெள்ளிப்பொருட்கள் அதிகளவில்  உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலை நம்பி சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், பல்லாயிரம் வெள்ளி  வியாபாரிகளும் உள்ளனர். இங்கு நாள் ஒன்றுக்கு 20 டன் அளவுக்கு வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்தே வெள்ளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாவட்டம், மாநிலம் விட்டு செல்ல  முடியாததால் தற்போது வெள்ளி வியாபாரம் 20 முதல் 30 சதவீதம் நடந்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளிப்பட்டறைகளில் வாரத்தில் இரண்டு  அல்லது மூன்று நாட்கள் தான் வேலை நடக்கிறது.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையையொட்டி கேரளா வியாபாரிகள் கால்கொலுசு உள்பட பல்வேறு பொருட்களை கேட்டு ஒரு  மாதத்திற்கு முன்பே ஆர்டர் தருவார்கள். நடப்பாண்டு கேரளா வியாபாரிகள் ஆர்டர் எதுவும் தரவில்லை. ஓணம் ஆர்டர் இல்லாததால் சேலம் வெள்ளி  வியாபாரிகளுக்கு ₹300 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளிப்பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல வியாபாரிகள் பஸ், ரயிலைத்தான் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவைகள்  இயங்காததால் வெள்ளி வியாபாரம் பாதித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் ஊரடங்கை தளர்த்தி வியாபாரிகள் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்தினால் பல லட்சம் தொழிலாளர்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு  வியாபாரிகள் கூறினர்.

முகூர்த்த கால வியாபாரமும் பாதிப்பு
நடப்பு ஆவணி மாதத்தில் எட்டுக்கும் மேற்பட்ட முகூர்த்தங்கள் உள்ளன. வழக்கமாக முகூர்த்த காலங்களில் மணப்பெண்கள், திருமணமான பெண்கள்  புது வெள்ளி கால் கொலுசு வாங்குவார்கள். அதேபோல் மெட்டி, அரைஞாண்கொடி, குங்குமச்சிமிழ், வெள்ளி டம்ளர் உள்ளிட்டவைகளின் விற்பனையும்  களைக்கட்டும். மொய் வைப்பவர்கள் குங்குமச்சிமிழ், வெள்ளிடம்ளர் உள்ளிட்டவைகளை அதிகளவில் வாங்குவார்கள். தற்போது ஆடம்பர திருமணம்  இல்லாததாலும், மக்கள் கையில் பணம் இருப்பு குறைந்ததாலும் முகூர்த்த சீசன் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்று வெள்ளி வியாபாரிகள்  கவலை தெரிவித்தனர்.



Tags : silver traders ,Salem ,Onam ,traders , Salem. 300 crore . non-availability, Onam ,
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...