×

இரட்டை ரயில் பாதைக்காக அமைக்கப்பட்டது பாளையங்கால்வாயில் மண் பாலம் அகற்றப்படாததால் காயும் விளைநிலங்கள்: விவசாயிகள் கண்ணீர்

நெல்லை: இரட்ைட ரயில் பாதைக்காக பாளையங்கால்வாயில் போடப்பட்ட தற்காலிக மண் பாலத்தை அகற்ற வேண்டும் என விவசாயிகள்  விரும்புகின்றனர். பாளையங்கால்வாய் தண்ணீர் தருவையை தாண்டி வர முடியாத நிலையில், பாளை பகுதியில் விவசாய நிலங்கள் காய்ந்து  கிடக்கின்றன.நெல்லையில் இருந்து நாகர்கோவில் வரை 74 கிமீ தூரம் இரட்டை ரயில் பாதைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி  பல்வேறு இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் மேல  முன்னீர்பள்ளம் பகுதியில் இரட்டை ரயில்பாதை பணிகளுக்காக பாளையங்கால்வாயின் குறுக்கே மண் பாலம் அமைக்கப்பட்டது. மண் மூடைகள் மற்றும் குழாய்களை அடுக்கி, பாளையங்கால்வாயை வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் அப்பாலம் போடப்பட்டது. இரட்டை  ரயில் பாதைக்கு தளவாட சாமான்கள் அப்பாலம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டன. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் புதிய பாலத்தை பயன்படுத்தி  வந்தனர். இந்நிலையில் முன்னீர்பள்ளம் பகுதியில் தற்போது இரட்டை ரயில்பாதை பணிகள் பெருமளவில் முடிந்து விட்டன. கைப்பிடிச்சுவர் உள்ளிட்ட  சில பணிகள் மட்டுமே பாக்கியுள்ளன. ஆனால் பாளையங்கால்வாயின் குறுக்கே போடப்பட்ட தற்காலிக பாலம் அகற்றப்படவில்லை.

இதனால் பாளையங்கால்வாயில் கார் சாகுபடிக்காக திறக்கப்பட்டுள்ள குறைந்தளவு தண்ணீரும் தருவையை தாண்டி வராத சூழல் காணப்படுகிறது.  விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பாளை சுற்றுவட்டாரங்களில் விவசாயிகள் பிசான சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.  முன்னீர்பள்ளத்தில் பாளையங்கால்வாய் அடைபட்டு கிடப்பதால், விளைநிலங்கள் காய்ந்து வருவதால் ஏராளமான விவசாயிகள் கண்ணீர்  சிந்துகின்றனர்.மேலப்பாளையம், நடுவக்குறிச்சி, மேலப்பாட்டம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளை சந்தித்து, ஏற்கனவே போடப்பட்ட தற்காலிக பாலத்தை  அகற்றிட கோரிக்கை வைத்துள்ளனர். எனவே விவசாயிகள் நலன்கருதி பாளையங்கால்வாயில் போடப்பட்ட தற்காலிக பாலத்தை அகற்றி, தண்ணீர்  சீராக வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Tags : land ,bridge ,dirt bridge ,Palayankalvai: Farmers ,lands ,Mud , double, track,Palayankalvai,cleared,tears
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!