×

வீட்டை ஏலம் விடுவதாக மிரட்டல் தனியார் வங்கி முன் வாலிபர் தீக்குளிப்பு: தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சை: தஞ்சை அருகே வீட்டை ஏலம் விடுவதாக வங்கியாளர்கள் மிரட்டியதால் தீக்குளித்த வாலிபர் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சை அருகே வல்லம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(40). வெல்டரான இவர், வல்லத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.9லட்சம் வீட்டு  கடன் வாங்கியிருந்தார். இதுவரை ரூ.13 லட்சம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் மேலும் ரூ.6.50 லட்சம் செலுத்த வங்கியாளர்கள் இவருக்கு  நோட்டீஸ் அனுப்பி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஆனந்த், வங்கிக்கு சென்று மேலாளரை சந்தித்து பேசினார். அப்போது வங்கி மேலாளர், மேலும் செலுத்த வேண்டிய  ரூ.6.50 லட்சத்தை உடனே செலுத்துமாறும், இல்லையென்றால் வீட்டை ஏலம் விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து வங்கியை விட்டு வெளியே வந்த ஆனந்த், தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்  கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்ததால், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சாக்கு, துணிகளை ஆனந்த் உடல் மீது போட்டு தீயை  அணைத்தனர். ஆனால் உடல் முழுவதும் தீயில் கருகியது.
தகவலறிந்து வந்த வல்லம் போலீசார் ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Tags : auction house ,Youths ,Tanjore ,bank ,house , private bank , house, Tanjore
× RELATED காரைக்காலில் பைக்குகள் திருடிய...