×

உடல்நலக்குறைவு காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்!

டோக்கியோ:  ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சில ஆண்டுகளாக, குடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். பிரதமரின் உடல்நிலை குறித்த பல வாரங்களாக ஊகங்கள் பரவி வருகின்றன. ஆனால் சமீபத்தில் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஜப்பான் அரசு தொலைக்காட்சியான என்.ஹெச்.கே வெளியிட்டுள்ள செய்தியில், தனது நோய் மோசமடைந்துள்ளதால் அபே ராஜினாமா செய்ய விரும்புகிறார். மேலும் நாட்டை வழிநடத்துவதில் இது சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கவலைப்படுகிறார் என குறிப்பிட்டிருந்தது.

2012ம் ஆண்டு இரண்டாம் முறையாக ஜப்பான் பிரதமராக பதவி ஏற்ற பின் அபே 2,799 நாட்களை வெற்றிகரமாக அப்பதவியில் கடந்து சாதனை படைத்துள்ளார். ஜப்பானின் நீண்டகால பிரதமரான அவருக்கு ஜப்பான் அரசியல் வட்டாரத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே 2007ம் ஆண்டு உடல் உபாதை காரணமாக தான் வகித்து வந்த பிரதமர் பதவியைத் துறந்தார்.  தற்போது 65 வயதாகும் அபே, நீண்ட நாட்களாக சிறுகுடல் பாதிப்பால் அவதியுற்று வருகிறார். மேலும் தனக்கு வயதாகிவிட்டதால் பிரதமர் பதவியை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெயரை ஜப்பான் தற்போது தக்கவைத்து இருப்பதற்கு முக்கியக் காரணம் அபே. அவரது இடத்தை மற்றொரு பிரதமர் வந்து நிரப்புவது மிகக்கடினம், என ஜப்பானியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Tags : Shinzo Abe ,Japanese , Ill health, Japan, Prime Minister Shinzo Abe, resigns
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்