×

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு

சென்னை: நீட்,ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்காக மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள், செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து இல்லாததால் சிறப்பு பேருந்துகளை இயக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இடையே சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்   தவிர்த்து சில மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பதால் பேருந்து போக்குவரத்து அறவே நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த சூழலில் தற்போது நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. நீட் என்பது மருத்துவத்திற்காக நுழைவு தேர்வு. ஜேஇஇ தேர்வு என்பது அகில இந்திய பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு. இந்த இரண்டு தேர்வுகளும் செப்டம்பரில் நடைபெறவுள்ளது. இதில் நீட் தேர்வினை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளனர். எனினும் அத்தேர்வினை நடத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஒருவேளை தேர்வினை மத்திய அரசு நடத்துவதாக இருந்தால் மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும். அதனை கருத்தில் கொண்டு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.

Tags : Government ,Tamil Nadu ,TN , NEET,JEE Exams ,TN Government,Special buses,Students
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...