உட்கட்சி தேர்தல் நடத்தாமல் இருந்தால் காங்கிரஸ் கட்சி மேலும் 50 வருடங்களுக்கு எதிர்கட்சியாகவே நீடிக்கும் : குலாம் நபி ஆசாத் ஆவேசம்!!

டெல்லி : உட்கட்சி தேர்தல் நடத்தாமல் இருந்தால் காங்கிரஸ் கட்சி மேலும் 50 வருடங்களுக்கு எதிர்கட்சியாகவே நீடிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார். டெல்லியில் பேட்டி அளித்த அவர், காங்கிரஸ் கட்சியில் நிலவும் பல்வேறு குளறுபடிகளை பட்டியலிட்டுள்ளார். மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு நியமனம் செய்யப்படும் தலைவர்கள் ஒரு சதவீத தொண்டர்களின் ஆதரவை கூட பெறாதவர்கள் என்று குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார். அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தி கட்சி தொண்டர்களின் 51% வாக்கு பெற்றவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்தல் நடத்தி நியமிக்க வேண்டும் என்று குலாப் நபி ஆசாத் வலியுறுத்தி உள்ளார். உட்கட்சி தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் தலைவர்கள், கட்சிக்கு மட்டுமல்ல நாட்டிற்கே கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபடுவதாக அவர் சாடியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், கட்சியின் அகில இந்திய தலைவா், மாவட்ட தலைவா்கள், மண்டல தலைவா்கள், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் என அனைவரும் தோ்தல் மூலமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். உட்கட்சி தேர்தலில் ஒருவர் போட்டியிட்டால் 51% ஆதரவு கிடைக்க வேண்டும். முக்கிய பதவிகளுக்கு இரண்டு அல்லது 3 பேர் மட்டுமே போட்டியிடுவார்கள், 51% வாக்குகள் கிடைத்தால் அவர் வெற்றி பெற்றுவிடுவார். மற்றவர்களுக்கு 10 % அல்லது 15% வாக்குகள் கிடைக்கும். தலைவர் பதவிக்கு வெற்றி பெறும் நபருக்கு கட்சியில் 51% ஆதரவு உள்ளது என்பது தெளிவாகும். தற்போது நியமனம் செய்யப்படும் தலைவர்களுக்கு 1% கூட ஆதரவு இல்லை. இதைத்தான் கடிதத்தில் வலியுறுத்தினோம். காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தவர்கள் நாங்கள் எழுதிய கடிதத்தை வரவேற்பார்கள், என்றார்.  

கட்சியில் சீர் திருத்தங்களை வலியறுத்தி, குலாப் நபி ஆசாத் உட்பட 23 மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு அண்மையில் கடிதம் எழுதினர். இது தொடர்பாக காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>