×

நீட், ஜேஇஇ தேர்வுகளை தாமதிப்பது மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும்: பிரதமர் மோடிக்கு 150 கல்வியாளர்கள் கடிதம்

புதுடெல்லி: ‘நீட், ஜேஇஇ தேர்வுகளை உடனே நடத்த வேண்டும். இனி மேலும், அதை தாமதிப்பது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்,’ என்று 150 கல்வியாளர்கள் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் நிலையில், மாநில அரசுகளின்கடும் எதிர்ப்பையும் மீறி, நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதில் தேசிய தேர்வு முகமையும் பிடிவாதமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் 7 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்தேர்வுகளை ரத்து செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். அதேபோல், இத்தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இத்தேர்வை தாமதிக்காமல் நடத்தும்படி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் 150 கல்வியாளர்கள், பிரதமர் மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள், ‘இளைஞர்களும், மாணவர்களும்தான் நம் நாட்டின் எதிர்கால தூண்கள். கொரோனா பரவலால் மாணவர்களின் கல்வி ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர்களின் எதிர்காலமும் இருண்டு விடக் கூடாது. இந்த ஆண்டில் மட்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அவர்கள் தங்களின் அடுத்த கட்டம் என்னவென்று ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். எனவே, நீட், ஜேஇஇ தேர்வுகளை தாமதப்படுத்துவது அல்லது தவிர்ப்பது போன்றவை, மாணவர்களின் நலனைப் பாதித்துவிடும். இளைய தலைமுறையின் கனவிலும், எதிர்காலத் திட்டங்களிலும் எந்த சமரசமும் ஏற்பட்டு விடக் கூடாது. உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

கடிதம் எழுதியவர்கள்
* டெல்லி பல்கலைக் கழகம், லக்னோ பல்கலைக் கழகம், ஜேஎன்யு, ஐஐடி டெல்லி என பல இந்தியக் கல்வி நிறுவனங்களை சேர்ந்த கல்வியாளர்களும், லண்டன் பல்கலைக் கழகம், கலிபோர்னியா பல்கலைக் கழகம் போன்ற வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் கல்வியாளர்களும் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.
* 2020-21ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு, செப்டம்பர் 13ம் தேதி நடத்தப்படுகிறது. இத்தேர்வு, வழக்கமாக மே 3ம் தேதி நடந்திருக்க வேண்டும்.
* ஜேஇஇ தேர்வுகள் ஏப்ரல் 7-11 தேதிகளில் நடந்திருக்க வேண்டும். இப்போது, செப்டம்பர் 1-6 வரை நடக்கிறது.

Tags : NEET, JEE exam, delays, affect students' future, PM Modi, 150 academics, letter
× RELATED ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல்...