×

அதிகபட்ச சில்லறை விலையை விட ஐஸ்கிரீமுக்கு 10 ரூபாய் அதிகம் வசூலித்த ரெஸ்டாரண்டுக்கு ரூ.2 லட்சம் அபராதம்:6 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு

புதுடெல்லி: ஐஸ்கிரீமுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விட 10 ரூபாய் அதிகம் வசூலித்த ரெஸ்டாரண்டுக்கு, ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பவம் நடந்து 6 ஆண்டுக்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மும்பை காவல் துறையில் எஸ்ஐயாக இருப்பவர் பாஸ்கர் ஜாதவ். இவர் கடந்த 2014 ஜூன் 8ம் தேதி, மும்பையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் பேமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கினார். அதற்கு ரூ.175 வசூலித்தது ரெஸ்டாரண்ட். ஆனால் பில்லில் ரூ.165 தான் போடப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தெற்கு மும்பையில் உள்ள மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில் 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

 அதில், ஐஸ்கிரீம் வாங்கியதற்கு ரெஸ்டாரண்ட்டில் கொடுத்த பில்லில் ரூ.165 மட்டுமே இருந்தது. ஆனால், பில் கவுண்டரில் கூடுதலாக ரூ.10 வசூலித்தனர். இதுகுறித்து ஆட்சேபம் தெரிவித்தும், ரெஸ்டாரண்ட் தரப்பினர் ஏற்கவில்லை என தெரிவித்தார். அந்த மனுவுடன் ரெஸ்டாரண்டில் வழங்கிய ரசீதையும் சமர்ப்பித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ரெஸ்டாரண்ட்டுக்கு நுகர்வோர் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியது. ரெஸ்டாரண்ட் சார்பில் சமர்ப்பித்த மனுவில், ஐஸ்கிரீமை பாதுகாப்பாக வைப்பதற்கு என தனியாக செலவாகிறது. எனவேதான், அதன் அதிகபட்ச விலையை விட அதிகமாக வசூலிக்க வேண்டியுள்ளது. கடைகளில் விற்கும் ஐஸ்கிரீம் விலையை விட ரெஸ்டாரண்ட்டில் அதிக விலைக்கு விற்க இதுவே காரணம் என தெரிவித்திருந்தது.

ஆனால், தீர்ப்பாயம் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. ஜாதவ் ஐஸ்கிரீமை பார்சல்தான் வாங்கியுள்ளார். அவருக்கு தண்ணீர் அளிப்பது, அமர்ந்து உணவருந்த பர்னிச்சர் வசதி, ஏசி, மின் விசிறி வசதிகள் அளிக்கப்படவில்லை. எனவே, அதிக கட்டணம் வாங்கியது நியாயமானதல்ல. அந்த ரெஸ்டாரண்ட் 24 ஆண்டாக இயங்குகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை லாபம் ஈட்டுகிறது. எனவே, அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதலாக வசூலித்ததன் மூலமாகவும் ரெஸ்டாரண்ட் லாபம் ஈட்டியுள்ளது என தெரிவித்த தீர்ப்பாய நீதிபதிகள், அந்த ரெஸ்டாரண்ட்டுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

Tags : restaurant , Maximum, retail price, 10 rupees more for ice cream, restaurant, Rs 2 lakh fine, verdict after 6 years
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...