×

வெஸ்டர்ன்,சதர்ன் ஓபன் அரை இறுதியில் ஒசாகா

நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெறும்  வெஸ்டர்ன் , சதர்ன் ஒபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் விளையாட ஜப்பானின் நவோமி ஒசாகா தகுதி பெற்றுள்ளார். கால் இறுதியில் எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவெய்ட்டுடன் (12வது ரேங்க்) மோதிய ஒசாகா (4வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 6-2 என எளிதில் வென்று சமநிலை ஏற்படுத்தினார். இதையடுத்து கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.

விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் ஒசாகா 4-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் எலிஸ்  மெர்டன்ஸ் (பெல்ஜியம்)  6-1, 6-3 என நேர் செட்களில்  ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். தொடர்ந்து நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில்  ஒசாகா-எலிசா  ஆகியோர் மோத உள்ளனர். மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்தின் ஜோன்னா கொன்டா,  பெலாரசின்  விக்டோரியா அசரென்கா ஆகியோர் விளையாடுகின்றனர்.

ஜோகோவிச் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-1 என்ற நேர் செட்களில், ஜெர்மனியின் லெனார்டு ஸ்டரூப்பை  எளிதாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். போட்டிகள் நிறுத்தம்: அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பின இளைஞர் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நிறவெறிக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்யும் வகையில், வெஸ்டர்ன் , சதர்ன் ஓபனில் நேற்று போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. அவை இன்று நடத்தப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இதே காரணத்துக்காக அரை இறுதியில் விளையாடப் போவதில்லை என்று ஒசாகா ட்வீட் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Osaka ,Western ,semi-final ,Southern Open ,semifinals , Western,Southern Open, Semi-Final, Osaka
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...