×

காதலை நிராகரித்த காதலியை பழிக்கு பழிவாங்க பெண் தொழிலதிபரின் படங்களை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்: பிளஸ்-2 மாணவன் கைது

சென்னை: காதலை நிராகரிக்க காரணமான காதலியின் தாயை பழிக்கு பழிவாங்க போலி பெயரில் இன்ஸ்டாகிராம் தொடங்கி பெண் தொழிலதிபரின் புகைப்படங்களை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று பதிவேற்றம் செய்த பிளஸ்-2 மாணவனை போலீசார் கைது செய்தனர். சென்னை குமரன் நகரை சேர்ந்தவர் ராணி (41)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொழிலதிபரான இவருக்கு சில நாட்களாக இரவு நேரங்களில் ஆபாச அழைப்புகள் வந்துள்ளது. மேலும், சமூக வலைத்தளத்தின் மூலம் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகளவில் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் தொழிலதிபர் சம்பவம் குறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அந்த புகாரின் படி குமரன் நகர் போலீசார் அடையார் துணை கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். அதில், ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் தான் இந்த வில்லங்கத்துக்கு காரணம் என தெரியவந்தது. உடனே அந்த பிளஸ்-2 மாணவனை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, “பிடிபட்ட பிளஸ்-2 மாணவன், பெண் தொழிலதிபர் மகளுடன் ஒன்றாக படித்து வந்துள்ளார். அந்த மாணவன் தன்னுடன் பள்ளியில் படித்து வந்த தொழிலதிபர் மகளை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதல் குறித்து மாணவன் பெண் தொழிலதிபர் மகளிடம் வெளிப்படுத்தி உள்ளார். அதற்கு மாணவி, என் அம்மாவுக்கு காதலிப்பது எல்லாம் பிடிக்காது என்று கூறி மாணவனின் காதலை நிராகரித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் அம்மாவான தொழிலதிபரை பழிவாங்க முடிவு செய்தார்.

அதன்படி இன்ஸ்டாகிராமில் போலியாக காதலியின் அம்மா பெயரில் 2 கணக்கு தொடங்கி, அதில் காதலியின் அம்மாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து ‘நிர்வாண வீடியோ கால் அழைப்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்’ என்று காதலியின் அம்மா செல்போன் எண்ணை பதிவு செய்துள்ளார். அதோடு இல்லாமல் பல்வேறு ஆபாச இணையதளத்தில் பல வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அந்த வீடியோவை காதலியின் அம்மாவிற்கு அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் பள்ளி மாணவன் மீது ஐபிசி 354, 509, ஐடி சட்டம் 66,67 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அடைத்தனர். மேலும், இன்ஸ்டாகிராமில் பெண் தொழிலதிபர் பெயரில் போலியாக தொடங்கப்பட்ட 2 கணக்குகளையும் போலீசார் அழித்தனர். பெண் தொழிலதிபரின் புகைப்படங்களை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்த பள்ளி மாணவன் மீது ஐபிசி 354, 509, ஐடி சட்டம் 66,67 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Tags : student ,businessman ,entrepreneur , Girlfriend Rejects Love, Revenge, Female Entrepreneur Picture, Morphing, Instagram Upload, Plus-2 Student, Arrested
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...