×

திருநின்றவூரில் வாகன சோதனையில் குட்கா கடத்திவந்த ஜீப்பை தடுத்த எஸ்.ஐயை கொல்ல முயற்சி

* மளிகை கடை வியாபாரி, டிரைவர் கைது
* 330 கிலோ போதைபொருள்கள் பறிமுதல்

திருநின்றவூர்: திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் குட்கா கடத்தி வந்த ஜீப்பை மடக்கிய போது போலீஸ் எஸ்.ஐயை கொல்ல முயன்ற வியாபாரி, டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும்,  அவர்களிடம்  இருந்து 330 கிலோ எடையுள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆவடி அடுத்த திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலை, நத்தம்மேடு பகுதியில் திருநின்றவூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஜீப்பை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, அந்த ஜீப் நிற்காமல் போலீசார் மீது மோதி கொல்ல முயற்சி செய்தது. இதில், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்பட போலீசார் மயிரிழையில் உயிர் தப்பினர்.

இதனையடுத்து, போலீசார் அந்த ஜீப்பை விரட்டி மடக்கி பிடித்தனர். பின்னர், போலீசார் ஜீப்பை சோதனை செய்த போது உள்ளே இரு மூட்டைகளில் 30கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
போலீசார் ஜீப்புடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரிடம் விசாரணை நடத்தினர். இதில், குட்காவை ஜீப்பில் கடத்தி வந்தது திருநின்றவூர், நடுகுத்தகையை சார்ந்த மளிகை கடை வியாபாரி முருகதாஸ் (42), திருநின்றவூர், கன்னடபாளையத்தை சேர்ந்த டிரைவர் கோதண்டபாணி (49)  என்பது தெரியவந்தது.

மேலும், போலீசார் முருகதாஸ் வீட்டை சோதனை செய்த போது, அங்கும் 300கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மொத்த மதிப்பு ரூ.2லட்சம் ஆகும். வியாபாரி முருகதாஸ், கர்நாடக மாநிலத்திலிருந்து குட்காவை ஜீப்பில் கடத்தி வந்து கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் முருகதாஸ்,  கோதண்டபாணி இருவரையும் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் நேற்று காலை ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் இருவரையும் செங்கல்பட்டு கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags : SI ,Thiruninravur ,vehicle check , In Thiruninravur, vehicle check, Gutka hijacked, jeep stopped, SI, attempt to kill
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...