×

திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் இடையே கிடப்பில் போடப்பட்ட இணைப்பு சாலை பணி: விரைந்து முடிக்க வலியுறுத்தல்

திருப்போரூர். ஆக.28: திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் இடையே, கிடப்பில் போடப்பட்ட இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருப்போரூரில் இருந்து திருக்கழுக் குன்றம் செல்லும் சாலை, மானாம்பதி அருகே அருங்குன்றம் சந்திப்பில் தரைப்பாலம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், மழை காலங்களில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த தரைப்பாலம் மற்றும் கைப்பிடிச்சுவர்கள் சேதமடைந்தது. இதையடுத்து இங்கு உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், மேற்கண்ட பகுதியில் பாலம் கட்டுவதற்கு முடிவு செய்து, அங்கிருந்த தரைப்பாலத்தை அகற்றி 12 தூண்களுடன் கூடிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பாலப்பணிகள் முடிந்ததும், கைப்பிடிச் சுவர்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, பாலத்தின் இரு பக்கமும் இணை ப்பு சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. இவ்வாறு ஜல்லிக்கற்கள் கொட்டி 5 மாதங்களுக்கு மேலாகியும் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் மானாம்பதி, அகரம், முள்ளிப்பாக்கம், சிறுதாவூர், ஆமூர் உள்பட பல பகுதிகளில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் சுமார் 1 கிமீ தூரம் ஜல்லிக்கற்களின் மீது வாகனங்களை ஓட்டிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் வருவோர் ஜல்லிக்கற்களில், வாகனங்களை ஓட்டி கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாகிவிட்டது. விரைவில் மழைக்காலம் தொடங்கி மானாம்பதி, அருங்குன்றம், பெரிய விப்பேடு ஆகிய ஏரிகளில் இருந்து உபரிநீர், இந்த கால்வாயின் வழியாக வெளியேற வேண்டிய நிலை உள்ளது. எனவே, பாலப்பணி முடிந்த நிலையில் இணைப்பு சாலைப்பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Thiruporur - Thirukkalukkunram , Thiruporur - Thirukkalukkunram, link road work, insistence to complete
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...