×

90 சதவீதம் நுரையீரல் பாதிப்பு ஆக்சிஜன் 35% அளவுக்கு குறைந்த நிலையில் நோயாளி தொற்றில் இருந்து மீண்டார்: 2 மாதம் போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்

சென்னை: 90 சதவீதம் நுரையீரல் பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவு 35 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருந்த நோயாளியை 2 மாதம் போராடி மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர். இந்த கடும் போராட்டம் ஓமந்தூரார் மருத்துவமனையில் நிகழ்ந்தது. சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சாலமன் (45). இவர் கொரோனா காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஜூன் 26ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு பிறகு அவர் குணமானார்.

இது குறித்து மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சாலமன் புற நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த போது, இருமல், காய்ச்சல் மூச்சுத்திணறலுடன், ஆக்சிஜன் அளவு, மிகவும் குறைந்து அதாவது 35 சதவீதம் அளவில் இருந்தது. நுரையீரல், 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தது. உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், உயிர்காக்கும் கருவிகள் வாயிலாக ஆக்சிஜன் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டது. அத்துடன், விலை உயர்ந்த மருந்துகள் அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில், 60 நாட்கள் தங்கியிருந்து, சிறப்பு சிகிச்சை மற்றும் மருத்துவ கவனிப்பு பெற்று பூரண குணமடைந்து, கடந்த 24ம் தேதி வீடு திரும்பினார். மருத்துவமனையில் அதிகளவில் நுரையீரல் பாதிப்போடு அனுமதிக்கப்பட்டு, அதிக நாட்கள் உள்நோயாளியாக தங்கியிருந்து பூரண குணமடைந்த நோயாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, மருத்துவர்கள் சுஜாதா, பத்மநாபன், ஒருங்கிணைப்பு அதிகாரி ரமேஷ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : patient ,doctors , 90 percent, lungs, oxygen 35% level, low level, patient, recovered, struggling for 2 months, doctors
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...