×

2017ம் ஆண்டு எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 அதிமுக எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் தனபால் விசாரணை: முதல்நாளான நேற்று 2 பேரிடம் நடந்தது

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்பட 11 அதிமுக எம்எல்ஏக்களிடம் ஏன் வாக்களீத்தீர்கள் என்று வீடியோ கான்பரன்சிங் மூலம் சபாநாயகர் தனபால் விசாரணையை தொடங்கியுள்ளார். முதல் நாளான நேற்று அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் எம்எல்ஏ நட்ராஜ் ஆகிய 2 எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி 2017ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி 18ம் தேதி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது தனி அணியாக செயல்பட்ட தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன், சண்முகநாதன் உள்பட 11 அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகர் சட்டத்தின் அடிப்படையில் மூன்று மாதத்தில் உரிய முடிவெடுப்பார் என கூறியது. ஆனாலும் விசாரணை நடத்தப்படவில்லை. திமுக மீண்டும் புதிய மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு ஜூலை 8ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் 4 வார காலம் அவகாசம் கேட்டார். இதையடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனு மீது சபாநாயகர் தனபால் 27ம் தேதி (நேற்று) வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. அதன்படி எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களிடம் விசாரணை தொடங்கியுள்ளது.

முதல் நாளான நேற்று காலை 11 மணிக்கு சபாநாயகர் தனபால், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தினார். நேற்று, தகுதி நீக்க புகாருக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் பாண்டியராஜன், சென்னை மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் ஆகிய 2 அதிமுக எம்எல்ஏக்களிடம் மட்டுமே விசாரணை நடந்தது. தினகரனுக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டவரும் புகார்தாரருமான சோளிங்கர் தொகுதி மாஜி எம்எல்ஏ பார்த்திபனிடமும் சபாநாயகர் தனபால் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின்போது, 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது, அதிமுக எம்எல்ஏவாக செயல்பட்ட நீங்கள் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேரும் தங்களின் விளக்கத்தை அளித்தனர். இந்த 2 எம்எல்ஏக்களை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மற்ற 9 எம்எல்ஏக்களிடம் விரைவில் சபாநாயகர் தனபால் விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில், 11 எம்எல்ஏக்களின் விளக்கத்தை பொறுத்து அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? அல்லது எம்எல்ஏக்களாக தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற தீர்ப்பை சபாநாயகர் தனபால் அளிப்பார். அவரின் தீர்ப்பின் விவரம் நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்படும். எம்எல்ஏக்களின் விளக்கத்தை பொறுத்து அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா அல்லது எம்எல் ஏக்களாக தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற தீர்ப்பை சபாநாயகர் அளிப்பார்.

Tags : Danapal ,AIADMK ,government ,Edappadi , In 2017, the Edappadi government voted, 11 AIADMK MLAs, Speaker Danapal, inquiry
× RELATED அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...