×

தமிழகத்தில் புதிய ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்? யுபிஎஸ்சி தலைவருடன் நடந்த ஆலோசனையால் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லி யுபிஎஸ்சி அலுவலக தலைவருடன் தமிழக உயர்மட்ட அதிகாரிகள் திடீரென நேற்று ஆலோசனை நடத்தியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், குறிப்பாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தும் இ-பாஸ் முறையில் எந்தவித தளர்வுகளும் அளிக்கப்படாமல் உள்ளது. மேலும், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக, புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை, மருத்துவக் கல்வியில் ஓபிசி இடஒதுக்கீடு, நீட் தேர்வு விவகாரம் போன்றவற்றில், மத்திய அரசின் முடிவுகளுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இதை தவிர தமிழக அரசும் பல பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளது. இதனால், பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது என மத்திய அரசு தரப்பில் இருந்து மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசின் மூத்த அதிகாரிகளான தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வரின் செயலாளர் பி.செந்தில்குமார், உள்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் டிஜிபி திரிபாதி ஆகியோர் நேற்று முன்தினம் விமானம் மூலம் டெல்லி சென்றனர். இதையடுத்து சாணக்கியாபுரி பகுதியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர்கள் நேற்று காலை யு.பி.எஸ்.சி தலைமை அலுவலகத்திற்கு சென்றனர்.
இதையடுத்து யு.பி.எஸ்.சி தலைவர் பிரதீப் குமார் ஜோஷி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்ததாக தகவல் தெரியவந்துள்ளது.

அதில், “தமிழகத்தில் மத்திய குடிமைப்பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்வது, அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுபவர்கள் எந்தெந்த இடத்தில் அமர்த்தப்படுவார்கள், அதேபோல் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம், மற்றும் புதிய அதிகாரிகளை நியமிப்பது ஆகியவை குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தரப்பிலும், அதேபோன்று சட்டம் ஒழுங்கு மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை குறித்து டிஜிபி திரிபாதி தரப்பிலும், உள்துறை தொடர்பான விவரங்களை எஸ்.கே.பிரபாகர் ஆகியோரிடம் யுபிஎஸ்சி தலைவர் தீவிரமாக கலந்து ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு புதிய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்த சில மாதங்களே உள்ள நிலையில் இந்த உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் தமிழகம் மட்டுமில்லாமல் நாள் ஒன்றுக்கு ஒரு மாநிலம் என அதன் உயர் அதிகாரிகளுடன் யுபிஎஸ்சி தலைவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது கூடுதல் தகவலாகும்.

Tags : Tamil Nadu ,IPS ,UPSC , In Tamil Nadu, New IAS, IPS Officers, Appointment ?, UPSC Chairman, Consulting, Excitement
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு