×

4 மாதங்களாக பூட்டிக் கிடந்த கோயம்பேடு மார்க்கெட் செப்.28ல் திறப்பு: செப்டம்பர் 18ம் தேதி உணவு, தானிய கடைகள் திறக்க அனுமதி; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ காரணமான கோயம்பேடு மார்க்கெட்கடந்த மே மாதம் 5ம் தேதி அதிரடியாக மூடப்பட்டது. நான்கு மாதங்களுக்கு பிறகு வரும் செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படுகிறது. முன்னதாக, செப்.18ம் தேதி உணவு, தானிய கடைகளைதிறக்க அனுமதி அளித்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனை தொடர்ந்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் காய்கறி கடைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் காய்கறி வாங்க கோயம்பேடு மார்க்கெட்டுக்கு படை எடுத்தனர். கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க குவிந்தனர்.

இதனால், கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. குறிப்பாக வியாபாரிகள், தொழிலாளர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று அடுத்தடுத்து கொரோனா தொற்று நகர் முழுவதும் வேகமாக பரவியது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து சென்றவர்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும் கொரோனா தொற்று பரவியது. இதை தொடர்ந்து, பழம் மற்றும் மலர் மார்க்கெட் ஏப்ரல் இறுதி வாரத்தில் மூடப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் முற்றிலும் மூடப்படுவதாக கடந்த மே 5ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, பூ மற்றும் பழ மார்க்கெட் மாதவரத்திற்கு மாற்றப்பட்டது. திருமழிசையில் மே 7ம் தேதி காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது.

இந்நிலையில் சென்னையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதன்படி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கோயம்பேட்டில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா முதல்வரை சந்தித்து கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.  
பின்னர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் முடிவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயம்பேடு மார்க்கெட்டை வரும் செப்.28ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை :
கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உணவுதானிய மொத்த விற்பனை சந்தை 18ம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை சந்தை 28ம் தேதியும் திறக்கப்படும். இதன்பிறகு அடுத்தகட்டமாக கனி, சிறு மொத்த காய்கறி, மலர் சந்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சந்தையை திறக்கும் போது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டு வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ‘பி’ சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டு இடதுபுறமாக திரும்பி, ‘ஈ’ சாலை வழியாக மலர் சந்தைக்கு அருகில் உள்ள காலி இடத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இதன்பிறகு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே ஒன்றன்பின் ஒன்றாக அனுமதிக்கப்படும்.

சந்தைக்கு வரும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் ‘ஏ’ சாலையை ஒட்டி அமைந்துள்ள கனரக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஒரு கடைக்கு ஒரு நேரத்தில் ஒரு கனரக வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். கனரக சரக்கு வாகனங்கள் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே சந்தை  வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும். சரக்குகளை இறக்கி வைத்தபின் அன்றைய தினம் இரவு 12 மணிக்குள் சந்தையை விட்டு வெளியில் சென்றுவிட வேண்டும். சில்லறை விற்பனை வாகனங்கள் அதிகாலையிலிருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். ஆட்டோ மற்றும், இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

தனி நபர்கள் காய்கறி வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான உரிய  அடையாள அட்டைகள் மற்றும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பின்னல் ஆடைகள் வழங்கப்படும். சந்தைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி இல்லை. தனிநபர் இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கீரைகள் மற்றும் வாழை இலைகள் விற்பனை ஏற்கனவே இயங்கி வந்த 9ம் எண் நுழை வாயிலில் உள்ள கடைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். சாலையோர விற்பனை முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை காவல் துறையினர் கண்காணிப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்ய தனியார் நிறுவனங்கள் மூலம் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் கடை உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள் மீது உரிம விதிமுறைகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மே 5ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இந்நிலையில் 113 நாட்கள் கழித்து கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படுவது வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    
* மார்க்கெட் கடைகளுக்கு வெளியே மற்றும் வேறு எந்த பகுதியிலும் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை.
* அனைத்து வியாபாரிகளும் உடல் வெப்ப சோதனை மற்றும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே நுழைய அனுமதிக்கப்படுவர்.
* சந்தைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி இல்லை. தனிநபர் இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

Tags : Coimbatore Market ,shops ,boutique ,Government of Tamil Nadu , 4 months, boutique, Coimbatore Market, opening on Sep. 28, food and grain shops allowed to open on September 18; Government of Tamil Nadu
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு...