×

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர் ஓயாத உழைப்பில் முப்படைகள்: மக்களை காக்கும் பணியில் மேலும் ஒரு தியாகம்

புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் டாக்டர்கள், நர்சுகள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் சேவை மகத்தானது. அதே போல், நாட்டு மக்களைப் பாதுகாக்க கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியுடன் நமது ராணுவத்தின் முப்படைகளும் 24 மணி நேரமும் அயராது போரிட்டு உழைத்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. நாட்டின் எல்லையை அந்நிய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பது மட்டுமல்ல ராணுவத்தின் பணி. உள்நாட்டில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ராணுவத்தின் பங்களிப்பு முக்கியமானது. எந்த இயற்கை பேரிடராக இருந்தாலும் முதலில் உதவிக்கு அழைக்கப்படும் அமைப்பாக ராணுவம் இருந்து வருகிறது, நாட்டின் எந்த பகுதியிலும் மழை வெள்ளம் ஏற்பட்டாலும் உடனே மீட்புப் பணிக்காக அழைக்கப்பட்டு, துரித கதியில் மக்களை மீட்பு பாதுகாப்பான இடங்களுக்கு ராணுவ வீரர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.சமீபத்தில் உத்தரகாண்ட்டில் பனிப்பாறை உருகியதால் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் சவாலான பணிகளுக்கும் ராணுவமே அழைக்கப்பட்டது. 1984ல் போபால் விஷவாயு கசிவு ஏற்பட்ட போது, ஆபத்தான கெமிக்கல் மீது தண்ணீர் தெளித்தது விமானப்படை விமானங்கள்தான். கடந்த ஆண்டு வெட்டுக்கிளிகளால் விவசாயிகளுக்கு ஆபத்து நேர்ந்த போது பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்தது நமது விமானப்படைதான். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே கொரோனாவுக்கு எதிராக ராணுவத்தின் முப்படைகளும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை, நாட்டிலேயே மிகப்பெரிய 10,000 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனையை டெல்லியில் அமைத்தது. ராணுவத்தின் உதவி கோரிய மாநிலங்களுக்கு ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டு தற்காலிக மருத்துவமனை அமைப்பது, ராணுவ டாக்டர்கள் மக்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். கொரோனா 2வது அலை கடந்த மார்ச் இறுதியில் தொடங்கிய உடனே மீண்டும் ராணுவம் களமிறக்கப்பட்டது. இம்முறை ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்ட நிலையில் அதை சீர் செய்யும் பணிகளில் முப்படைகளும் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ‘சமுத்ரா சேது-2’ என்ற ஆபரேஷனை கடற்படை தொடங்கியது. இதன்படி, ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் கொள்கலன்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர,  பக்ரைன், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு போர்க்கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஐ.என்.எஸ் கொல்கத்தா மற்றும் ஐ.என்.எஸ் தல்வார் ஆகிய 2 போர்க்கப்பல்கள். 40 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை மும்பைக்கு கொண்டு வர, பக்ரைனின் மனாமா துறைமுகத்த்திற்கு சென்றுள்ளது. இதேபோன்ற ஐ.என்.எஸ் ஜலாஷ்வா பாங்காக்கிற்கும், ஐ.என்.எஸ் ஐராவத் சிங்கப்பூருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக, கடற்படை செய்தித் தொடர்பாளர் தளபதி விவேக் மாத்வால் தெரிவித்தார்.கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் விமானப்படையும் குறிப்பிடதக்க பங்களிப்பை செய்து வருகிறது. நமது விமானப்படை விமானங்கள், நாடு முழுவதும் ஆக்சிஜன் நிரப்பும் ஆலைகளுக்கு வெற்று ஆக்சிஜன் கொள்கலன்களைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன. வெற்று கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்களை இந்தியாவில் உள்ள பல்வேறு உள்நாட்டு நிலையங்களுக்கும், வெளிநாடுகளில் உள்ள ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு அனுப்புவதில் இது ஈடுபட்டுள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி நிலவரப்படி, வெளிநாட்டிலிருந்து 670 மெட்ரிக் டன் திறன் கொண்ட 39 ஆக்சிஜன் கொள்கலன்களை நமது விமானப்படை விமானங்கள் இந்தியா கொண்டு வந்துள்ளன. உள்நாட்டிற்குள் 1,798 மெட்ரிக் டன் திறன் கொண்ட 87 கொள்கலன்களை விமானத்தில் ஏற்றிச் சென்றது. இதே போல், இந்தோ-திபெத் ராணுவத்தினர் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்சிஜன் ஆலைகளில் பழுதை நீக்கும் பணியிலும், மருத்துவ கருவிகள், பொருட்கள் விநியோகம் முறையாக நடக்க உதவுவதிலும், தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். ராணுவம் சார்பில் நாடு முழுவதும் சிறப்பு கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு, அதன் மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ராணுவம், துணை ராணுவம் போன்றவற்றில் இதுவரையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியும் இருக்கின்றனர். இருப்பினும், எல்லைக்கு வெளியே மட்டுமின்றி, எல்லைக்கும் உள்ளேயும் மக்களின் காக்கும் அவர்களின் பணி நடந்து கொண்டுதான் இருக்கிறது.* நிதி அதிகாரம்கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட, ராணுவத்துக்கு அவசரகால நிதி அதிகாரத்தையும் மத்திய அரசு வழங்கி உள்ளது. கமாண்டர்கள், ஏரியா கமாண்டர்கள், ரூ.50 லட்சம் வரையும், டிவிஷன் கமாண்டர்கள், ஏரியா துணை கமாண்டர்கள், ரூ.20 லட்சம் வரையும் செலவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ‘இந்த நிதி அதிகாரங்கள் தனிமைப்படுத்தும் வசதிகள், மருத்துவமனைகளை நிறுவுவதற்கும், செயல்படுவதற்கும், உபகரணங்கள், மருத்துவ கருவிகளை கொள்முதல், பழுதுபார்ப்பதல் ஆகியவற்றுக்கும் தொற்றுநோய்க்கு எதிரான தொடர்ச்சியான முயற்சிகளை ஆதரிக்க தேவையான பல்வேறு சேவைகள் மற்றும் பணிகளை வழங்குவதற்கும் உதவும்,’ என பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிதி அதிகாரம் மே 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முப்படைகளின் மருத்துவ தலைவர்களுக்கு இதே போல மத்திய அரசு கடந்த வாரம் நிதி அதிகாரம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது….

The post கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர் ஓயாத உழைப்பில் முப்படைகள்: மக்களை காக்கும் பணியில் மேலும் ஒரு தியாகம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Corona ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...