கோயம்பேடு சந்தை திறப்பு குறித்து இன்று இரவு அறிவிக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பிறகு விக்கிரமராஜா பேட்டி

சென்னை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோயம்பேடு சந்தை திறப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பிறகு கோயம்பேடு திறப்பு குறித்த அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.

திருமழிசை சந்தை முழுமையாக அகற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக காய்கறி மொத்த வியாபாரம் தொடங்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக பழம் மற்றும் பூ கடைகளை திறக்க அனுமதியளிக்கப்படும் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளது. பழக்கடை, மொத்த வியாபாரம், மலர் சந்தையை திறப்பது பற்றி 10 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளுடன் கோயம்பேடு சந்தை மீண்டும் புத்துணர்வுடன் செயல்பட தொடங்கும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்.

கொரோனா பரவல் ஆரம்பத்திலிருந்தே சென்னையில் அதிகரித்த வண்ணமாக உள்ளது. தொற்று பரவல் அதிகரித்ததற்கு காரணம் கோயம்பேடு காய்கறி சந்தைதான் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சந்தை உடனடியாக மூடப்பட்டது. பின்னர் திருமழிசைக்கு காய்கறி சந்தை மாற்றப்பட்டது.

மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே திருமழிசையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்றது. வியாபாரிகள் மட்டுமல்லாமல் பொது மக்களும் தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மாநகருக்கு வெளியே அமைந்துள்ள்ள திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் அதற்கு வழி இல்லை.

இதனால் காய்கறிகள், பழங்கள் விற்பனை குறைந்து டன் கணக்கில் வீணாகிவருகின்றன. கொரோனா பொது முடக்கத்தால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தை இடமாற்றத்தால் வியாபாரிகள் பெரியளவில் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

Related Stories:

>