×

நீட், ஜே.இ.இ., தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம்: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

புதுடெல்லி: நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் நுழைவுத்தேர்வு வருகிற செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.  இதேபோல் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறையாததால் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதேபோல் இந்த தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையும், தேர்வு அட்டவணையை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம்.

கடந்த 24 மணி நேரத்தில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 15.97 லட்சம்  மாணவர்களில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதேபோல், ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பித்த 8.58 லட்சம் மாணவர்களில், 7.5 லட்சம் மாணவர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளதாக, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதிக அளவு மாணவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருப்பது அவர்கள் தேர்வு எழுதுவதில் ஆர்வமாக இருப்பதையே காட்டுகிறது. மேலும், மாணவர்களின் வசதிக்காக ஜே.இ.இ தேர்வு மையங்கள் 570-லிருந்து 660 ஆகவும், நீட் தேர்வு மையங்கள் 2,546-லிருந்து 3,842 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, என கூறியுள்ளார். 


Tags : JEE ,Ramesh Pokri ,Union ,Ramesh Pokriyal , Need, J.E.E. Selection, of students, by Union Minister Ramesh Pokriyal
× RELATED ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு