×

ஊதிய குறைப்பு, ஆட்குறைப்பு முடிவில் நிறுவனங்கள்.. பத்திரிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு மனை வசதிகளை வழங்குக : முதல்வர் பழனிசாமியிடம் மனு!!

சென்னை : பத்திரிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு மனை அல்லது குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழக முதல்வருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் முன்களப்பணியாளர்களாக செயல்படும் மருத்துவ துறையினர், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோருடன் இணைந்து, கொரோனா தொடர்பான அரசின் விழிப்புணர்வு மற்றும் கொரோனா பரவல் குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பத்திரிக்கையாளர்கள் களத்தில் நின்று செயலாற்றி வருகின்றனர்.

அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்துவரும் பத்திரிக்கையாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர். ஊரடங்கு காலத்திலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவையாற்றி வரும் மருத்துவத்துறையினர், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்களின் நலன்கள் மீது அக்கறை செலுத்தும் மத்திய மாநில அரசுகள், ஊடங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் நலனிலும் அவர்களின் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்ற எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, ஊடகத்துறைகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்,  செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் முழுச்செலவையும் அரசே ஏற்கும் என்று தெரிவித்தது.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் , பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுஉயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி கொரோனா தொற்றால் உயிரிழந்த நாகையை  சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜான் கென்னடி உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக அரசு சார்பாக தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. தமிழக அரசின் இத்தகைய உதவிகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான முன்களப் பணியாளர்களில் ஒருவராக செயல்பட்டு வரும் பத்திரிக்கையாளர்கள் பலர் இந்த கொரோனாவால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்திரிக்கைகளை நடத்தும் நிறுவனங்கள் விற்பனை குறைவு, விளம்பர வருவாய் இழப்பு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட காரணங்களால் நலிவடைந்து வருகின்றன. இதன் காரணமாக அந்நிறுவனங்களால் பல பத்திரிக்கையாளர்கள் ஊதிய குறைப்பு, ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்கள் மிகவும் சொல்லொன்னா துயரங்களுக்கு ஆளாகின்றனர். பலரால் தங்களது வீட்டு வாடகையை கூட செலுத்த முடியாத மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளனர்.

ஆகவே, இந்த இக்கட்டான சூழலில் களத்தில் சேவையாற்றி வரும் பத்திரிக்கையாளர்களுக்கு உதவும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் பத்திரிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கவும் அல்லது பத்திரிக்கையாளர்களுக்கு என குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.  

இவ்வாறு அவர் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.Tags : Companies ,Palanisamy ,journalists ,layoffs ,housing facilities , Companies at the end of pay cuts, layoffs .. Provide free housing facilities for journalists: Petition to Chief Minister Palanisamy !!
× RELATED 9 தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல்...