×

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தவர் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் : ராமதாஸ் புகழாரம்!!

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும், இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஏ.ஆர்.லட்சுமணன் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.உச்சநீதிமன்றத்திலும், சென்னை, கேரளம், ஆந்திரம், இராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களிலும் பணியாற்றிய நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன், ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 37 ஆயிரத்திற்கும் கூடுதலான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை புரட்சிகரமான தீர்ப்புகளாகும்.  கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதித்தும், ஆந்திர உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த போது குட்கா விற்பனைக்கு தடை விதித்தும் தீர்ப்பளித்தவர். இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என பரிந்துரை செய்தவர்.

நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். என் மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர். பல விஷயங்களில் அவருக்கு நான் தான் முன்னோடி என்பதை வெளிப்படையாகவே அறிவித்தவர். புகையிலைப் பொருட்களுக்கு எதிராக எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்கள் தான் பொது இடங்களில் புகை பிடிப்பதையும், குட்கா விற்பனையையும் தடை செய்து தாம் தீர்ப்பளித்ததற்கு காரணமாக இருந்ததாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தின்  அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததற்கும் நான் தான் முன்னோடி என்றும் பல்வேறு தருணங்களில் நீதியரசர் லட்சுமணன் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியர் அமைப்புகளை ஒருங்கிணைத்து வன்னியர் சங்கம் என்ற அமைப்பை நான் உருவாக்கியது போல, அனைத்து நகரத்தார் சங்கங்களையும் ஒன்றிணைத்து “நகரத்தார் ஐக்கிய சங்கம்” உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்று சமூக நலப்பணியாற்றுவதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். பா.ம.க. மற்றும் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில்  அவர் கலந்து கொண்டிருக்கிறார். அவர் மறைந்து விட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது புதல்வர் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும்  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.


Tags : AR Lakshmanan ,Chennai High Court ,Ramadas ,Justice , He suggested that Tamil should be declared the official language of the Chennai High Court Justice AR Lakshmanan: Praise for Ramadas !!
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...