×

அருந்ததியினருக்கு 3% உள்ஒதுக்கீடு..அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம்சேர்க்க வழிவகுத்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்: ஓ.பி.எஸ் ட்வீட்

சென்னை: அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் என்ற தீர்ப்புக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு பட்டியலின பிரிவில் உள்ள அருந்ததியினர் சமூகத்தினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே இடஒதுக்கீடு முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட, ரிட் மனுக்கள் நிலுவையில் உள்ளதால், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மற்றும் சரவணகுமார் தாக்கல் செய்த மனுக்களை, உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என யசோதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி அருண்மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில், அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. பட்டியல் இனத்துக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவிதம் உள்ஒதுக்கீடு செல்லும். பட்டியலின பிரிவினர் இடையே உள் ஒதுக்கீடு வழங்கும் வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது. வழக்கை விரிவாக விசாரிப்பதற்காக 7 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்கும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம்  அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம்சேர்க்க வழிவகுத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன், என கூறியுள்ளார்.



Tags : Supreme Court ,Arundhati , Supreme Court judgment, DMK, Arundhati race, AIADMK, O.P.S.
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...