×

தமிழின வரலாறுகளை பாதுகாக்க திருப்பூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமையுமா?: ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர்: திருப்பூரில் தமிழின வரலாறுகளை காக்க தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் பின்னலாடை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு பெயர் போன மாவட்டமாக விளங்குகிறது. மேலும்,  சிற்பக்கலைக்கு பெயர்போன திருமுருகன் பூண்டி, ஆவுடையநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவில், மற்றும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் போன்ற  சிறப்பு வாய்ந்த தலங்களையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது.  மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலும் பலவகையான நடுகல், நெடுங்கல் மற்றும் பல வகையான தமிழ் எழுத்து செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  அதை பாதுகாப்பதில் அரசாங்கம் மெத்தனப் போக்காக செயல்படுவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.நடுகல் என்பது  இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இதற்கு “வீரக்கற்கள்” என்றும் பெயரிட்டு கூறுவர்.

வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா  ஆகிய நான்கு மாநிலங்களிலும் பழங்கால நடுகல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக 2 வட்டெழுத்து புலிக்குத்தி நடுகல் திருப்பூரில்  கண்டுபிடிக்கப்பட்டவைகளாகும். அதுமட்டுமல்லாமல் நெடுங்கல், புள்ளச்சாமி சிலைகள், தமிழ் செப்பேடுகள் போன்றவைகளையும் கண்டுபிடித்துள்ளனர்.   இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 50க்கும் மேற்பட்ட நடுகல், நெடுங்கல், புள்ளச்சாமி  சிலை போன்றவை திருப்பூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இன்னும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் அந்த  கண்டுபிடிக்கப்பட்ட  நடுகல்கள் உள்ளிட்ட பலவகையான தமிழ் வரலாறுகள், நெடுங்கல் அதே இடங்களில் பராமரிப்பு இல்லாமலும் இருந்து வருகிறது.

நடுகல் பொதுமக்களின் பாதுகாப்பில் சில இடங்களில் இருந்தாலும் சில இடங்களில் அதனை பொதுமக்கள் கண்டும் காணாமலும் வீணடித்து  விடுகின்றனர். பழைய வரலாறுகளை வெளிப்படுத்தப் பயன்படும் பாரம்பரியமிக்க கற்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல்  அப்புறப்படுத்தப்படுவது வேதனையளிக்கிறது. அரசாங்கத்தால் இவற்றை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்  கூறினர்.

காற்றில் பறந்த அமைச்சர் வாக்குறுதி
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், ‘‘திருப்பூரில் பல பகுதிகள்  மற்றும் கொடுமணல் ஆகிய பகுதிகளில் பல வகையான தென்மையான பொருட்கள் கண்டிபிடிக்கப்பட்டு வருகின்றன. அதை பாதுகாக்க தொல்பொருள்  அருங்காட்சியகம் கட்டாயமாக ஓராண்டிற்குள் அமைக்கப்படும்’’ என்ற வாக்குறுதி அளித்தார். ஆனால் 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று  வரை அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.


Tags : Archaeological Museum ,Tirupur ,Tamil ,Researchers , preserve, Tamil ,histories,Archaeological ,Museum ,Tirupur ,Researchers,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு