ஆண்டுக்கணக்கில் நீளும் சொத்து பிரச்சனை வழக்கில் தலைமை நீதிபதியிடமே கடன் கேட்டு கடிதம்!: பண்ருட்டி நபரின் நடவடிக்கையால் பலரும் வியப்பு..!!

கடலூர்: பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சொத்து வழக்கை காரணம் காட்டி 50 லட்சம் ரூபாய் கடன் தருமாறு கட்டிட தொழிலாளர் ஒருவர் நீதிபதிக்கே கடிதம் எழுதியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டிட தொழிலாளியான இவர், தனது தாத்தாவின் வீட்டை மோசடி செய்த வரதராஜு என்பவரிடம் இருந்து மீட்டுத்தரகோரி 1994ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பண்ருட்டி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, 2012ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தை ஆறுமுகம் நாடியுள்ளார். 26 ஆண்டுகளாகியும், வழக்கு முடிந்தபாடில்லை. சொத்துக்கு தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த ஆறுமுகம், மனு மீது நடவடிக்கைக்கோரி குடியரசு தலைவருக்கும் கடிதம் எழுதிவிட்டார்.

இதையடுத்து, வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரிவிக்குமாறு தமிழக தலைமை செயலருக்கு அங்கிருந்து பரிந்துரைக்கப்பட்ட கடிதமும், ஆறுமுகத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் தான் தலைமை நீதிபதியிடம்  50 லட்சம் ரூபாய் கடன் கேட்டு ஆறுமுகம் கடிதம் எழுதியுள்ளார். வழக்கு தொடர்ந்து, இழுத்தடிக்கப்படுவதால் தாம் வறுமையில் வாடுவதாக அந்த கடிதத்தில் ஆறுமுகம் சுட்டிக்காட்டியுள்ளார். சொத்து பிரச்சனை வழக்கில் தலைமை நீதிபதியிடமே கடன் கேட்ட பண்ருட்டி நபரின் இத்தகைய நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories:

>