×

நீட் ,ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் : ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஒடிசா மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!!

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க கோரி ஏழு மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தை நாடுவதைப் போல ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநில முதலமைச்சர்களும் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் எனக் கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கழகத் தலைவர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:
:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,

வணக்கம்!

தாங்கள் நலமாகவும், நல்ல உடல்நலத்துடனும் இருப்பீர்கள் என நம்புகிறேன். நீட் மற்றும் ஜெஇஇ 2020 எழுதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காகவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

தேர்வுகளை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்பதாலும், சில மாதங்களில் இயல்புநிலை திரும்பும் என்ற நம்பிக்கையிலுமே ஜூன் 2020 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், நாடு முழுவதும் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பெருந்தொற்று மட்டுமின்றி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இவற்றால், கிராமப்புறங்களும், மலைப் பகுதிகளும் பிற முக்கியப் பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. விமானம், ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி பெரும்பாலான மாணவர்களுக்கு இல்லாததுடன், ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதில் நிச்சயமற்ற நிலையே நீடித்து வருகிறது.

மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில முதலமைச்சர்கள் நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வு நடத்தும் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். மேலே விளக்கப்பட்ட கடுமையான சிக்கல்களையும், மாணவர்களின் நல்வாழ்வையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நமது ஒருமித்த நிலைப்பாடு, நாடு முழுவதும் உள்ள மாணவர் மற்றும் பெற்றோரின் குரலுக்கு வலுசேர்ப்பதாக இருக்கட்டும்.

அன்புள்ள,

மு.க.ஸ்டாலின்.

Tags : Chief Ministers ,Supreme Court ,Andhra Pradesh ,Telangana ,Stalin ,elections ,Odisha ,Kerala , Need, J.E.E. Stalin's letter to the Chief Ministers of Andhra Pradesh, Telangana, Kerala and Odisha should be sought from the Supreme Court to postpone the elections !!
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...