×

பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்லூரிகளிலிருந்து 105 பேராசிரியர்கள் பணிநீக்கம் : பச்சையப்பன் அறக்கட்டளை அறிக்கை தாக்கல்!!

சென்னை:  பச்சையப்பன் அறக்கட்டளையில் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், 105 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கந்தசாமி ஆண்கள் கல்லூரி உள்பட 6 கல்லூரிகள் மற்றும் சில பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடு நடப்பதாகவும், எனவே அறங்காவலர் தேர்வு நடத்தவேண்டுமென்றும் எல். செங்குட்டுவன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது தற்போது நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக பல மாதங்களாக நடைபெற்ற விசாரணையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். அதாவது, அறக்கட்டளை உறுப்பினர் தேர்வினை நடத்த வேண்டும், மேலும் அதற்காக தற்போதுள்ள அறக்கட்டளை நிர்வாகியான ஓய்வுபெற்ற நீதிபதி பி. சண்முகத்தை அறக்கட்டளை தலைவராக நியமிப்பதாகவும் அவர் தீர்ப்பளித்திருந்தார். இந்நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு தடைவிதிக்கக்கோரி, பச்சையப்பன் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர்கள் மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து அந்த மனுவானது 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்கள் தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டனர். இதனால் வழக்கானது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அறக்கட்டளைக்கு கீழ் உள்ள கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக, விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம், 105 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், குறிப்பாக யூ.ஜி.சி. என்று சொல்லக்கூடிய பலக்லைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, இதனால் 105 பேராசிரியர்களையும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இருந்தபோதிலும், சென்னை உயர்நீதிமன்றம் முதன்மை அமர்வு, வாய் மொழியாக கேட்டுக்கொண்டதற்கிணங்க பணிநீக்க உத்தரவானது அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் பதவி விலக இருப்பதாகவும், புதிய தலைவரை நியமிக்கும் வரை தாம் பணியில் இருப்பதாக நீதிபதி சண்முகம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கானது திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags : colleges ,professors ,Pachaiyappan Foundation: Pachaiyappan Foundation , 105 professors sacked from colleges under Pachaiyappan Foundation: Pachaiyappan Foundation files report !!
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...