×

காஞ்சிபுரம் காரப்பேட்டை-வாலாஜா இடையே நாற்கர சாலை 536 கோடி மதிப்பில் 6 வழிச்சாலையாக மாற்ற ஏற்பாடு : நிலம் அளவீடு பணிகள் தீவிரம்

ராணிப்பேட்டை: காஞ்சிபுரம் காரப்பேட்டை-வாலாஜா இடையே உள்ள தங்க நாற்கர சாலை 536 கோடி மதிப்பில் 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கான  நில அளவீடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தங்க நாற்கர சாலை வழியாக தென் மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா,  கர்நாடகா, கேரளா  உள்ளிட்ட  மாநிலங்களுக்கு  ஏராளமான பொதுமக்கள் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ஏராளமான  லாரிகள் சரக்கு பெட்டகங்களை ஏற்றிச் சென்று  வருகின்றன.  தங்க நாற்கர சாலையாக உள்ள நிலையில் நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சாலையின் இருபுறமும் உள்ள கிராம மக்கள் அபாயத்தை உணராமல் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது.  ஏராளமானோர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர்.இந்நிலையில், வாகன போக்குவரத்தை சீர் செய்யவும், சாலை விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கவும், கடந்த ஆண்டு 4 வழிச்சாலையானது 6  வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வரை 6 வழிச்சாலை  அமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை (வெள்ளைகேட்) முதல் வாலாஜா வரை உள்ள 36 கி.மீ தூர 4 வழிச்சாலையானது 6  வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நவீன கருவி மூலமாக நிலம் அளவீடு செய்யும் பணிகள்  தொடங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் இருந்து வாலாஜா வரை ₹536 கோடி  மதிப்பில் 36 கி.மீ தூரம் உள்ள 4 வழிச்சாலையானது 6 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. ஓச்சேரி, காவேரிப்பாக்கம், டோல்கேட் ஆகிய இடங்கள்  உட்பட 8 பெரிய பாலங்கள், 7 சிறுபாலங்கள் என மொத்தம் 15 பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. 6 வழிச்சாலை அமைப்பதன் மூலம் வாகன  போக்குவரத்து சீராக இயங்கும். மேலும், சாலை விபத்துகள் ஏற்படுவதும் தடுக்கப்படும், என்றனர்.

Tags : road ,Kanchipuram Karapettai-Walaja ,Karapet-Walaja ,Kanchipuram , Arrangements , Karapet-Walaja ,surveying ,works
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி