×

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு எப்எம்ஜிஇ தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடி

* தேர்வு மதிப்பெண்களும் குறைக்கப்படுமா? * பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்பார்ப்பு

நெல்லை: வெளிநாட்டில் மருத்துவம் படித்து, எப்எம்ஜிஇ தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு தேர்வு வாரியம் கேரளா, கர்நாடகாவில்  மையங்களை ஒதுக்கியுள்ளது. இதனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் எவ்வாறு தேர்வு எழுத செல்வது என மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.  மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் தேர்ச்சி மதிப்பெண்ணையும் குறைக்க வேண்டுமென பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்  எதிர்பார்க்கின்றனர்.மருத்துவ கல்வி படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் சந்திக்கும் சவால்கள் ஏராளம். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள்  எடுத்திருந்தாலும், நீட் தேர்வில் தேவையான கட் ஆப், விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்காதது, சொந்த மாநிலத்தில் படிக்க முடியாத நிலை என  பல பிரச்னைகளை சந்திக்கின்றனர்.இந்த தடைகளை தாண்டி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர இடம் கிடைக்கும் சில ஆயிரம் மாணவர்கள் மட்டுமே  நிம்மதியடைகின்றனர். தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களை சாதாரண ஏழை, நடுத்தர மாணவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது. கோடிகளில் புரளும் இந்த மருத்துவ கல்வியை  படிக்க முடியாமல் அதனை கைவிடும் நிலைதான் பலருக்கு  தொடர்கிறது.

மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியமுள்ள மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய  வெளிநாடுகளில் குறைந்த கல்வி கட்டணத்தில்  மருத்துவம் படிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதன்படி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் உள்ள  மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்து மருத்துவம் படிக்கின்றனர். ஆனால் படித்து விட்டு  இந்தியா திரும்பிய பிறகும் அவர்களுக்கு சிக்கல் நீடிக்கிறது.வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) முடித்தவர்கள், இந்தியாவில் மருத்துவர்களாகப் பணியாற்ற, ‘Foreign Medical Graduate  Examination’ (எப்எம்ஜிஇ) தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது  மாநில மருத்துவ கவுன்சிலில், மருத்துவர்களாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்க முடியும். ஆண்டுக்கு 2 முறை ஆன்லைனில் தேர்வு நடக்கும்.  இத்தேர்வை கடந்த 2002ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் அறிமுகப்படுத்தியது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மருத்துவ படிப்பு முடித்தால் இந்ததகுதி தேர்வை இந்தியாவில் எழுத  தேவையில்லை.  ஆனால் ரஷ்யா, சீனா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா போன்ற மற்ற நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில்  மருத்துவர்களாக பணியாற்ற கண்டிப்பாக இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும்.ஆங்கிலத்தில் நடத்தப்படும் இத்தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்கள். அதில் 50% சதவீதம் மார்க் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்,  இத்தேர்வில் வெற்றி பெற்ற  பிறகும் இந்தியாவில் ஒரு ஆண்டு உள்ளூர் மருத்துவராக பயிற்சி பெற வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் முழு மருத்துவராக முடியும்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் தற்போது அதிகமாகி வரும் சூழ்நிலையில் மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாடுகளில்  படித்து முடித்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களை இங்கு பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு  வருகிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை இவ்விஷயத்தில் கவனம் செலுத்தவேயில்லை. தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சூழ்நிலையில்  எப்எம்ஜிஇ தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை 50 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய சுகாதார துறை  அமைச்சர் ஹர்ஷவர்த்தன் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டு  வருகின்றன.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு மூலமாக மத்திய சுகாதாரதுறை அமைச்சரிடம்  இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். சுகாதார துறை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் வரும் 31ம் தேதி நாடு முழுவதும் ஆன்லைனில் எம்எம்ஜிஇ தகுதி தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக தமிழகத்தில் சென்னை, திருச்சி,  மதுரை ஆகிய 3 மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. எப்எம்ஜிஇ தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு தேர்வு வாரியம் கேரளா,  கர்நாடகாவில் மையங்களை ஒதுக்கியுள்ளது. இதனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் எவ்வாறு தேர்வு எழுத செல்வது என மாணவர்கள்  கவலையடைந்துள்ளனர்.தேர்வு நடைபெறும் ஆகஸ்ட் 31ம் தேதி திங்கட்கிழமை. அதற்கு முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தில் முழு ஊரடங்கு  கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களைப் பெற்றவர்கள், சனிக்கிழமையே தங்கள் ஊரில் இருந்து புறப்பட  வேண்டும். வெளியூர் அல்லது வெளி மாநிலங்களுக்கு போக்குவரத்து இல்லாத சூழல், விடுதிகள் இயங்காத நிலையில், 2 நாட்களுக்கு முன்பே சென்று  வெளியூர்களில் தங்கவும் முடியாது.

இதுபோன்ற சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு வாரியம், தேர்வு மையங்களை மாற்றி ஹால் டிக்கெட் வழங்கலாம். மத்திய மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் இதில் தலையிட்டு விரைவாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என அனைவரும்  எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து பிலிப்பைன்ஸ் பென்ஸ் கல்வி மைய தலைமை செயல் அலுவலர் குணசேகர் அரியமுத்து கூறும் போது, ‘வெளிநாட்டு மருத்துவ  மாணவர்களுக்கான தகுதி தேர்வு தமிழகத்தில் திருச்சி, மதுரை, சென்னை ஆகிய மூன்று மையங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆனால் அண்டை  மாநிலமான கேரளாவில் எர்ணாகுளம், கொல்லம், கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், திரிச்சூர் ஆகிய 6 மையங்களில் நடத்தப்படுகிறது.தென் மாவட்ட மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை உட்பட பல இடங்களில் கூடுதல் மையங்களை ஏற்படுத்த வேண்டும்.  மேலும், இத்தேர்வு முறையில் உள்ள விதிமுறைகளை தளர்த்தி சாதாரண மாணவ, மாணவிகளின் மருத்துவ கனவை நிறைவேற்ற மத்திய அரசு  முன்வர வேண்டும் என்றார்.

தேர்வு எழுத தயாராகி வரும் நெல்லையை சேர்ந்த மாணவி சங்கீதா கர்ணன் கூறும்போது, ‘பிலிப்பைன்ஸ் பெர்பெச்சுவல் கல்லுாரியில் மருத்துவம்  படித்துள்ளேன். வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தகுதி தேர்வை நாங்கள் எளிதில் சந்தித்து வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலையில் இத்தேர்வில்  உள்ள கடுமையான  விதிமுறைகளை எளிதாக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் அதிக மருத்துவர்கள் உருவாகி மக்களுக்கு சேவை செய்ய  முடியும் என்றார்.பிலிப்பைன்ஸ் பெர்பெச்சுவல் மருத்துவ கல்லூரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் லட்சுமி வாசன் கூறும்போது, ‘சாதாரண ஏழை, நடுத்தர  மாணவர்களின் மருத்துவ படிப்பு லட்சியத்தை பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லூரிகள் நிறைவேற்றி வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட ஆங்கிலம்  பேசும் 5 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது போல் ஆங்கிலம் பேசும் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்தாலும்  இத்தகுதி தேர்வுக்கு விலக்கு  உண்டு என மத்திய அரசு விலக்களிக்க வேண்டும். இதன்மூலம் இந்தியாவில் மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்குவதோடு தற்போதைய  கொரோனா பிரச்னைகளை எளிதில் சமாளிக்க முடியும் என்றார்.

இந்தியாவின் தலைசிறந்த இருதயவியல் மருத்துவர்களில் ஒருவரும் பத்ம, பத்மபூஷன் விருதுகளை வென்றவருமான மங்களூரைச் சேர்ந்த டாக்டர்  டேவி ஷெட்டி, இந்தியாவில் மருத்துவ கல்வி படிக்கவும், மருத்துவ சேவை ஆற்றவும் விதிமுறைகள் கடுமையாக உள்ளன. இந்த விதிமுறைகளை  தளர்த்த வேண்டும். அதே போல் வெளி நாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய  வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

செல்போன், நகைகளுக்கு அனுமதி கிடையாது
தேர்வு எழுத வரும் மா ணவர்கள் கண்டிப்பாக முக கவசம், கையுறைகள் அணிந்திருக்க வேண்டும், ஒளி ஊடுருவும் வகையிலான தண்ணீர்  பாட்டில்கள், தேர்வு அனுமதி சீட்டு, ஆதார் உள்ளிட்டவற்றை கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் பொருட்களை அவர்களே சொந்த  பொருப்பில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

மாணவர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டு புகைப்படம் எடுக்கப்படும். சந்தேகப்படும்படி நடந்து கொள்ளும் மாணவர்கள்  தேர்வறையிலிருந்து  வெளியேற்றப்படுவர். ஸ்டேஷனரி பொருட்கள், கால்குலேட்டர், பேனா, தேர்வு அட்டை, பென்டிரைவ், ரப்பர், செல்போன், புளூடூத், இயர்போன், கடிகாரம்,  , நகைகள், கைப்பைகள், வாலட்கள், பெல்ட், தொப்பி, உணவுப்பொருட்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கே வர வேண்டும்
வரும் 31ம் தேதி நடைபெறும் எப்எம்ஜிஇ தகுதி தேர்வு 2 கட்டமாக தேர்வு நடக்கிறது. தேர்வு நாளன்று காலை 7 மணிக்கு தேர்வு மையத்திற்குள் வர  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 8.30 மணிக்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 8.45 மணிக்கு மாணவர்களுக்கு ஆன்லைன் லாக் இன்  வழங்கப்படும்.  8.50 மணிக்கு மாணவர்கள் தேர்வு குறிப்பை படிக்கலாம். 9 மணிக்கு தேர்வு துவங்கி 11.30க்கு முடிவடையும்.

இதேபோல் மதியம் நடைபெறும் தேர்வுக்கு பிற்பகல் 12 மணிக்குள் மையத்தில் இருக்க வேண்டும். 1.30 மணிக்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 1.45 மணிக்கு லாக் இன்  வழங்கப்படும். 1.50 மணிக்கு தேர்வு குறிப்பை படிக்கலாம். 2மணிக்கு தேர்வு துவங்கி 4.30 மணிக்கு முடிவடையும்.

Tags : exam centers ,FMGE ,FMGE Exam Centers , studied ,medicine, abroad, FMGE ,Exam, Centers
× RELATED நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்