×

சாரல் இல்லாததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது

தென்காசி: குற்றாலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக சாரல் இல்லாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் காலத்தில் ஜூன், ஜூலை ஆகிய 2 மாதங்களும் சாரல் சரிவர பெய்யவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் முதல் பத்து  நாட்கள் மட்டுமே சாரல் நன்றாக பெய்தது. அதன்பிறகு தற்போது வரை குறிப்பிடத்தக்க அளவில் சாரல் இல்லை. பெரும்பாலான நாட்கள் வெயில்  காணப்படுகிறது. தொடர்ந்து சாரல் இல்லாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைய துவங்கியுள்ளது.

 மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில்  ஓரளவு தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவியில் குறைவாகவே தண்ணீர் விழுகிறது.இந்நிலையில் நேற்று வெயில் மறைந்து சற்று இதமான சூழல் நிலவியது. மதியத்திற்கு பிறகு வெயில் இல்லை. வானம் மேகமூட்டத்துடன்  காணப்பட்டது. மாலையில் இதமான காற்று வீசியது. ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் அருவிகளில் சுற்றுலா  பயணிகளும் உள்ளூர் பொதுமக்களும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவி பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Courtallam , saral, Water, Courtallam ,falls ,low
× RELATED 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல்...