×

ஜி.எஸ்.டி வரி விகிதம் 18% ஆக குறைந்தால் இருசக்கர வாகன விலை ரூ. 10,000 வரை குறைய வாய்ப்பு!: பஜாஜ் ஆட்டோ

டெல்லி: இருசக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் 18 சதவீதம் வரை குறைக்கப்பட்டால் அவற்றின் விலை 10 ஆயிரம் ரூபாய் வரை குறையும் என பஜாஜ் ஆட்டோ மேலாண் இயக்குனர் திரு. ராஜிவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ராஜிவ் பஜாஜ் , அதிகளவு ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சந்தையில் விரும்பத்தகாத சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இருசக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் 28 சதவீதம் என்பதிலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டால் அவற்றின் விலை 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை குறையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஏற்றுமதி ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டதால் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜிவ் பஜாஜ் குறிப்பிட்டுள்ளார்.

வேலை இழப்பும், ஊதிய இழப்பும் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் நுகர்வோர்களுக்கான ஊக்கத்தொகையை அரசு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அதிகப்படியான கட்டுப்பாடுகள், நுகர்வோர்களுக்கான விலையில் 30 முதல் 35 சதவீத அளவிற்கு ஏற்றத்தை உண்டாக்கியுள்ளதாக ராஜிவ் பஜாஜ் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற இந்திய தொழில்துறை தலைவர்கள் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாடினார். அப்போது  பேசிய அவர், இருசக்கர வாகனத்திற்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறைக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்தார். தற்போது இருசக்கர வாகனத்திற்கான வரி விகிதம் 28 சதவீதம் ஆக உள்ளது. இருசக்கர வாகனம் என்பது ஆடம்பர பொருளோ அல்லது போதை பொருளோ அல்ல இது பெரும்பாலன இந்திய நடுத்தர குடும்பத்தின் முக்கிய போக்குவரத்து சாதனம்.

அதனால், இதன் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைப்பது என்பது சிறந்த யோசனை என்றார். மேலும் தற்போது முதல் கட்டமாக இருசக்கர வாகனத்திற்கான வரிவிகிதத்தையும் பிறகு நான்கு சக்கர வாகனத்திற்கான வரிவிகிதத்தையும் குறைக்க நேரிடலாம் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் இருசக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் 18 சதவீதமாக குறைக்கப்பட்டால் அவற்றின் விலை 10 ஆயிரம் ரூபாய் வரை குறையும் என பஜாஜ் ஆட்டோ மேலாண் இயக்குனர்  ராஜிவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்..!

Tags : GST ,Rs ,Bajaj Auto , GST ,goods and service tax, Bajaj auto, Two wheeler
× RELATED ஜிஎஸ்டி வரி விதிப்பு, மானியம் ரத்தால்...