×

தங்க கடத்தல் வழக்கு ஆவணங்கள் எரிப்பு கேரளாவில் எதிர்கட்சிகள் போராட்டம்: போலீஸ் தடியடியில் 50 பேர் காயம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த தீ விபத்தில் ஆளுங்கட்சியினரின் சதி இருப்பதாக கூறி கேரளா முழுவதும எதிர் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் தடியடியில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். திருவனந்தபுரம் தங்க  கடத்தல் வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் புரோட்டாக்கால் அதிகாரி அலுவலகத்தில் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் உள்ள புரோட்டாக்கால் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து  ஏற்பட்டது. இந்த விபத்தில் பல முக்கிய ஆவணங்கள் எரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று இரவு வரை காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், பாஜ, யுவமோர்ச்சா, முஸ்லீம் லீக், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. அடுத்தடுத்து இக்கட்சி தொண்டர்கள் தலைமை செயலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

இதே போல் கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ், பாஜ தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணூர், எர்ணாகுளம் பகுதிகளில் காங்கிரசாரை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். கேரளா முழுவதும் நடந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதற்கிடையே தீ விபத்து சம்பவம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த கோரி கேரள எதிர் கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கவர்னர் ஆரிப் முகமதுகானிடம் மனு கொடுத்துள்ளார். அதில், ‘ தங்க கடத்தல் வழக்கில் உள்ள முக்கிய ஆவணங்கள் தான் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கவர்னர் உடனடியாக தலையிட்டு, அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தலைமை செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக பாஜ மாநில தலைவர் சுரேந்திரன், காங்கிரஸ் எம்எல்ஏவான சிவகுமார் உள்பட 50க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* மின் விசிறியே காரணம்
தீ விபத்துக்கு மின் விசிறி தொடர்ந்து ஓடியது தான் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மின்விசிறியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீ பரவியுள்ளது.தொடர்ந்து அந்த மின் விசிறி கீழே விழுந்ததால் தீ மேலும் பரவியது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

* குற்றப்பிரிவு விசாரணை  
தீவிபத்து குறித்து, குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பேரிடர் நிவாரணத்துறை ஐஏஎஸ் அதிகாரியான கவுசிகன் தலைமையில் விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம், சிறப்பு விசாரணை பிரிவு எஸ்.பி அஜித் ஆகியோர், தலைமைச்செயலகத்தில் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தீ விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்களும் பரிசோதனை செய்தனர்.

Tags : Opposition parties ,Kerala ,police raid ,police baton , Gold smuggling case, burning of documents, Kerala, Opposition protest, police beating, 50 injured
× RELATED மத்திய அரசின் வேளாண் சட்டங்கள்...