×

அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தமிழக பொருளாதாரம் அடியோடு நாசம்: பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

சென்னை: தமிழக அரசின் கொரோனா கால கட்டுப்பாடுகளால் தமிழக பொருளாதாரம் அடியோடு சரிந்து மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரடங்கு தடை உத்தரவு மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொது போக்குவரத்து தடை என்பது மக்களின் வாழ்வாரத்துக்கு பெரும் தடையாக உள்ளது. சிறு தொழில் வைத்திருப்பவர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு எடுத்த செல்ல முடியாத நிலையில் உள்ளனர். வாடகை வாகனம் மூலம் கொண்டு சென்றால் வாடகைக்கே அவர்களின் வருமானம் போய்விடுகிறது. இதனால் உற்பத்தியாகும் பொருட்கள் வீணாகுவதோடு வருமானத்துக்கு வழி இல்லாமல் தவிக்கின்றனர்.  

இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ், எங்கு சென்றாலும் போலீசாரின் கெடுபிடி சோதனைகள் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் கிராமப்புற மக்களை மட்டுமல்ல நகர்ப்புற மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த கொடுமைகளுக்கு இடையே, அன்றாட கூலி வேலை செய்பவர்கள் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை தேடி இருசக்கர வாகனங்களில் சென்றால் அவர்களை மனசாட்சியே இல்லாமல் மடக்கி போட்டு போலீசார் அதிக கெடுபிடி காட்டுகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகள் கீழ்தட்டு மக்களை வறுமை நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.

இதுபோன்ற அரசின் கெடுபிடிகளால் கிராமப்புற பொருளாதாரம் முற்றிலும் அழிந்து விட்டது. தங்கள் நிலங்களில் கஷ்டப்பட்டு விளைய வைத்த காய்கறிகளை பஸ்களில் ஏற்றி விற்பனை செய்து அன்றாட வருமானத்து வழி ஏற்படுத்தி கொள்வார்கள். ஆனால் அதற்கு இ்பபோது வழி இல்லை. இதனால் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்கள் அனைத்தும் நிலங்களிலே வீணாகிப் போகிறது.  வேலை இழப்பு, தனியார் நிறுவனங்கள் மூடல், வணிக நிறுவனங்கள் முழு அளவில் செயல்படாதது போன்றவற்றால் நகர் பகுதி மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

இதனால் தமிழகத்தை பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில் அடகு நகைக்கடைகளிலும், டாஸ்மாக் கடைகளிலும் தான் மக்கள் கூட்டம் களைகட்டுகிறது. தமிழகத்தில் இந்த பரிதாபகரமான நிலையை பார்த்தால் பெரும் பொருளாதார அழிவை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இனியும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு அடுத்த வேளை சோற்றுக்கு கூட திண்டாடும் நிலை வந்துவிடுவார்கள் என்பது பொருளாதார நிபுணர்களின் கடும் எச்சரிக்கையாக உள்ளது.

Tags : Tamil Nadu ,Economists , Government, curfew control, Tamil Nadu economy, devastation, economists, warning
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து