×

ஓராண்டு நிறைவு செய்த கல்வி தொலைக்காட்சிக்கு முதல்வர் எடப்பாடி பாராட்டு

சென்னை: ஓராண்டு நிறைவு செய்த கல்வித் தொலைக்காட்சிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா சவாலை எதிர்கொண்டு, இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில், மாணவர்கள் தங்கள் கற்றலை இல்லங்களிலிருந்தே தங்கு தடையின்றி பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சி மாற்றி அமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கான பாட அட்டவணைப் போன்று கல்வித் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அட்டவணை, வகுப்பு வாரியாக, பாட வாரியாக, வார நாட்களுக்கு தயாரிக்கப்பட்டு 2ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் வீடியோ பாடப்பதிவுகள் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வகையில் தயாரிக்கப்பட்ட அனைத்து வீடியோ பாடப் பகுதிகளிலும் கியூஆர் கோடு விரைவுக்குறியீடு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. 1 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பமாகும். நாட்டிலேயே முதன் முறையாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி வேலை நாட்களில் பாடங்கள் நடத்தப்படுவதைப் போன்று ஒளிபரப்பு அட்டவணை தயாரிக்கப்பட்டு, பாடவாரியாக தலைப்பு வாரியாக பாடம் நடத்துவதும், 10-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மொழியில் பாடம் ஒளிபரப்புவதும் கல்வித் தொலைக்காட்சியின் தனிச் சிறப்பாகும்.

கல்வித் தொலைக்காட்சி’’ இன்றுடன் முதலாம் ஆண்டினை பூர்த்தி செய்கிறது என்ற செய்தியும், இந்தத் தொலைக்காட்சி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்ற செய்தியும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியினை அளிக்கிறது. ஓராண்டு நிறைவு செய்த கல்வித் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்தினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதனை சிறப்பாக செயல்படுத்தி வருகின்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், அலுவலர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ, மாணவியர் நலன் கருதி, எனது தலைமையிலான அரசு இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளை புரியும். இவ்வாறு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Edappadi ,Education Television , One year completion, Education Television, Chief Edappadi, Praise
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...