×

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் தனபால் இன்று விசாரணை: வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கிறது

சென்னை: எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்த விவகாரம் தொடர்பாக, சபாநாயகர் தனபால் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்துகிறார். தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி 18ம் தேதி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட 11 அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருந்தாலும் 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும், சபாநாயகர் உத்தரவே இறுதியானது என கூறி விட்டது. இதையடுத்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அடுத்த மூன்று மாதத்தில் இதுகுறித்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. ஆனாலும் சபாநாயகர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் திமுக தரப்பில் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் நீதிமன்றம் கொடுத்த 3 மாத காலக்கெடு முடிந்த நிலையிலும் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதனால் நீதிமன்றமே முன்வந்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் 3 ஆண்டுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, சபாநாயகர் தனபால் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கடந்த 14ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால், “எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஏன் வாக்களித்தீர்கள்” என விளக்கம் கேட்டு கடிதம் எழுதப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், 11 எம்எல்ஏக்களிடமும் சபாநாயகர் தனபால் இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் விளக்கம் கேட்கிறார். அப்போது, எடப்பாடி அரசுக்கு எதிராக ஏன் வாக்களித்தோம் என்பது குறித்து சபாநாயகரிடம் 11 எம்எல்ஏக்களும் விளக்கம் அளிப்பார்கள்.

Tags : government ,Danapal ,video conferencing ,Edappadi ,OBS , Edappadi Government, Voting Issue, OBS, 11 MLAs, Speaker Danapal, Inquiry Today, Video Conferencing
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...