×

கொரோனாவால் கல்லூரி மாணவர்களுக்கு அடித்தது ‘லக்’ எத்தனை ஆண்டு, அரியர் இருந்தாலும் ஆல்பாஸ்: உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேட்டி

சென்னை: முதல்வர் அறிவிப்பின்படி, எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும், அந்த தேர்வுகளை எழுத மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். பிஇ, பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க இருப்பதை அடுத்து, கடந்த 15ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த 20ம் தேதி அசல் சான்றுகளை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் தங்கள் சான்றுகளை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். கடந்த 21ம் தேதி ரேண்டம் எண்கள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த திட்டம் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.  பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீனியாரிட்டி கிடைக்கும் வகையில் சமவாய்ப்பு எண்கள் என்னும் ரேண்டம் எண்கள் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ரேண்டம் எண்கள் நேற்று மாலை 4 மணி அளவில் தரமணியில் உள்ள சிபிடியில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான சான்று சரிபார்ப்பு சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஆகிய 6 மண்டலங்களில் நடக்கும். அந்த மண்டலங்களில் இன்று முதல் செப்டம்பர் 10ம் தேதிக்குள் சரிபார்த்துக் கொள்ளலாம். செப்டம்பர் 17ம் தேதி மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் இறுதித் தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகளில் மாணவர்கள் அரியர் வைத்திருந்து அதை இந்த ஆண்டு எழுத கட்டணம் செலுத்தி இருந்தால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்க முதல்வர் அறிவித்துள்ளார்.

படித்து முடித்து எத்தனை ஆண்டுகள் கழித்து இருந்தாலும் அரியர் வைத்திருந்து அந்த தேர்வுக்கு மாணவர்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அந்த தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாவர். மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உயர்கல்வித்துறை அரசாணை வெளியிடும். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை சார்ந்த கருத்துகளை அரசுக்கு அளிக்க உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்படும்.

* அரசு கல்லூரியில் கட்டண உயர்வு இல்லை
அமைச்சர் கூறுகையில்,‘‘ அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது. அதேநேரத்தில் தனியார் கல்லூரிகள் கட்டணத்தை உயர்த்த கட்டணக்குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அது குறித்து கட்டண குழு முடிவு செய்யும்’’ என்றார்.

* 22 கல்லூரிகள் இல்லை
கே.பி.அன்பழகன் கூறுகையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு 480 பொறியியல் கல்லூரிகள் கவுன்சலிங்கில் பங்கேற்றன. இந்தாண்டு அதன் எண்ணிக்கை 458 ஆக குறைந்துள்ளது. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 67,877 இடங்களுக்கு கவுன்சலிங் நடக்கும் என்றார்.

Tags : college students ,Corona ,Anupalagan ,Minister of Higher Education , Corona, college student, scored ‘luck’, how many years, Aryan, Alpas, Minister of Higher Education Anbalagan, interview
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...