×

டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 450 ஊழியர்கள் திடீர் டிரான்ஸ்பர்

* நிர்வாக நடவடிக்கைக்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு
* தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை

சென்னை: ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25ம் தேதி தமிழகம் முழுவதும் காலை 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை மூடி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் 90 சதவீதம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது. சென்னையில் 720 கடைகளில் 700 கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.15 கோடி விற்பனை இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சென்னையில் 25 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 450 பேரை டாஸ்மாக் நிர்வாகம் டிரான்ஸ்பர் செய்துள்ளது. இவர்கள் மதுபான குடோன்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  

இது குறித்து தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது: டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏறத்தாழ 450க்கும் மேற்பட்ட பணியாளர்களை கிடங்கிற்கு பணி மாற்றம் செய்துள்ளனர். சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று விடும் என்கிற குருட்டு நம்பிக்கையில் அரசும், நிர்வாகமும் பணியாளர்களை பழிவாங்கி போராட்டத்தை ஒடுக்கி விடலாமென நினைக்குமேயானால் போராட்டம் மேலும் வலுவடையும். அரசுக்கு பெருத்த வருமான இழப்பு ஏற்படும். போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை பழிவாங்கும் நோக்கில் பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வராவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.


Tags : transfer ,stores ,Tasmac ,struggle , Tasmac store, closed, in struggle, 450 employees, Transfer
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...