×

மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டுமானப்பணி அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவுக்கு ‘சிலிக்கான்’ சிலை: டிசம்பரில் திறக்க ஏற்பாடு தீவிரம்

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா கட்டிடத்தில் ஜெயலலிதாவை போன்று தத்ரூபமாக இருக்கும் வகையில் சிலிக்கான் சிலை வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் நினைவிடம் கட்ட கடந்த 2018ல் ரூ.50.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த 2018 மே 7ம் தேதி நினைவிட கட்டுமான பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இப்பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், சூப்பர் ஸ்டெக்சுரல் எனப்படும் பினீக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில், இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதில் ஒப்பந்த நிறுவனத்துக்கு போதிய அனுபவம் இல்லாததால், இப்பணிகளை 12 மாதங்களில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், துபாயில் இருந்து கட்டுமான பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மூலம் பீனிக்ஸ் பறவை இறக்கை பொருத்தும் பணி நடந்தது. தற்போது, இப்பணிகள் முழுவதும் முடிவடைந்தது.

இதை தொடர்ந்து ஐஐடி நிபுணர்கள் குழுவினர் பீனிக்ஸ் பறவை இறக்கை ஸ்டெக்சுரல் வடிவமைப்பு சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்தனர். இதற்கு, ஐஐடி ஒப்புதல் அளித்ததின் பேரில் பீனிக்ஸ் பறவை முதுகுப்பகுதிக்கு கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து, இந்த வடிவமைப்புக்கு ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு, ஜெயலலிதா நினைவிட வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ கண்காட்சி அரங்கம் ஒளி, ஒலி அமைப்புடன் டிஜிட்டல் முறையில் அமைக்கப்படுகிறது. இந்த வீடியோ திரையில் பட்டனை அழுத்தினால், மலர்தூவும் வசதி செய்யப்படுகிறது.

அதில், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளிப்பது போன்ற வசதியும் இடம் பெறுகிறது. இந்த அருங்காட்சியம் மற்றும் அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவை போன்று தத்ரூபமாக இருக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் சிலிக்கான் சிலை அமைக்கப்பட இருக்கிறது. இப்பணிகளுக்காக ரூ.12 கோடி தமிழக அரசிடம் பொதுப்பணித்துறை நிதி கேட்டுள்ளது. அதன்பேரில் தமிழக அரசு சார்பில் நிதி விடுவிக்கப்படும் பட்சத்தில் இப்பணிகள் தொடங்கப்படுகிறது. இருப்பினும் இப்பணிகளை விரைந்து முடித்து, டிசம்பர் 5ம் தேதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எனவே, ஜெயலலிதா நினைவிடத்தை டிசம்பரில் திறக்கும் வகையில், நினைவிட கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Intellectual Park ,Jayalalithaa ,Memorial Construction Museum ,Marina Beach ,Marina Beach Memorial Construction Museum , Marina Beach, Memorial, Construction, Museum, Intellectual Park, Jayalalithaa, ‘Silicon’ Statue, to open in December
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...