×

மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டர் முறைகேடுக்கு ஒத்துழைக்க மறுத்த சந்தோஷ்பாபு ஐஏஎஸ் ராஜினாமா ஏற்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை: மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டர் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை செயலாளராகவும், தமிழ்நாடு பைபர்நெட் கழக தலைவராகவும் பதவி வகித்தவர் சந்தோஷ்பாபு ஐஏஎஸ். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை செயலாளராக கடந்த ஆண்டு பதவி வகித்தபோது, அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்தும் மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் வெளியிட்டது. இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.1,815 கோடி ஒதுக்கீடு செய்தது. தமிழகத்தில் 55,000 கிமீ தொலைவுக்கு ஆப்டிக்கல் பைபர் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட வேண்டியிருந்தது. அதற்கு கடந்த டிசம்பர் 11ம் தேதி ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் டெண்டர் அறிவிப்பு வெளியானது.

தமிழக மூத்த அமைச்சர் ஒருவரின் நெருங்கிய நிறுவனத்துக்கு டெண்டர் அளிப்பதற்காக, டெண்டர் விதிகளை தளர்த்த ஆளும் கட்சியில் இருந்து அழுத்தம் கொடுத்தனர். இதற்கு ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் அவரது எதிர்ப்பையும் மீறி டெண்டரில் திருத்தம் செய்யப்பட்டதால், தமிழக அரசு மற்றும் துறை அமைச்சர் மீது சந்தோஷ்பாபு அதிருப்தியில் இருந்தார். இந்த டெண்டரில் பல்வேறு முறைகேடு நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து மத்திய அரசின் தலையீட்டின் பேரில் பாரத் நெட் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

இந்த பிரச்னையால் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழக அரசுக்கு சில மாதங்களுக்கு முன் சந்தோஷ்பாபு கடிதம் அனுப்பினார். பின்னர் அவர் தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டு கழக தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றதாக கடந்த 21ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிகவும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்ட சந்தோஷ் பாபு பணி ஓய்வுபெறுவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் திடீரென விருப்ப ஓய்வு பெற்றிருப்பது உயர்மட்ட அரசியல் தலைவர்கள் உள்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில் சென்னையில் உள்ள ஆபீசர் ஐஏஎஸ் அகாடமியில் சந்தோஷ்பாபு முழுநேர ஆசிரியராக சேர்ந்துள்ளார்.

* ஆபீசர் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்தார்
ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த சந்தோஷ்பாபு, சென்னையில் உள்ள ஆபீசர் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்துள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் இந்த ஐஏஎஸ் அகாடமியில் சந்தோஷ்பாபு மின்ஆளுகை, தொழில்நுட்பம், பொதுஅறிவு, பொது நிர்வாகம் போன்ற பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க உள்ளார். அதோடு ஆபீசர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் தலைமை வழிகாட்டியாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இவர் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், ஹார்வர்ட் பல்கலை மற்றும் சிங்கப்பூரின் தேசிய பல்கலை ஆகியவற்றில் படித்து பட்டம் பெற்றவர். இவர் 250க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளையும், புதுமுயற்சிகளையும் தொடங்கியுள்ளார். ஐடி துறையின் முதன்மை செயலாளராகவும், சிவகங்கை மற்றும் கிருஷ்ணகிரி ஆட்சியராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

Tags : Tamil Nadu ,government ,Santoshbabu IAS , Central Government, Bharat Net Project, Tender Fraud, Refusal to Cooperate, Santoshbabu IAS, Accepts Resignation, In Tamil Nadu Politics
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...