×

மத்திய அரசின் அடுத்த அஸ்திரம் மரபணு சட்டத்தால் வருகிறது புது ஆபத்து: சாதி, சமூக ரீதியாக பயன்படுத்த வாய்ப்பு நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரிக்கை

புதுடெல்லி: மத்திய அரசின் பல தடாலடிகளை அடுத்து, புதிய அஸ்திரமாக டிஎன்ஏ சட்டம் கொண்டு வரும் முயற்சி நடக்கிறது. ‘சாதி, சமூக ரீதியாக இந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு தன் நகல் அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிஎன்ஏ தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம் என்பது இந்த சட்டத்துக்கு பெயர்; குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி, தொடர்புடையவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரின் டிஎன்ஏ  பதிவுகளையும் பதிவு செய்து அறிவியல் ரீதியாக டிஜிட்டல் மூலம் சேகரித்து வைக்க இந்த சட்டம் உதவுகிறது.

இந்த சட்டம் பல நாடுகளில் இருந்தாலும் இந்தியா போன்ற நாடுகளில் தவறாக பயன்படுத்த வழி இருப்பதால் இதை கொண்டு வர இதுவரை இருந்த அரசுகள் தயாராக இல்லை. ஆனால், மத்தியில் உள்ள பாஜ அரசு, டிஎன்ஏ சட்டத்தை பல வித திருத்தங்களுடன் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. சட்ட திருத்த நகலை மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் தயார் செய்துள்ளது. குற்றம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் முதல் நாட்டுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் வரை எல்லோரின் டிஎன்ஏ பதிவுகள் இருந்தால் எதிர்காலத்தில் குற்றங்களை, சதி செயல்களை தடுக்கலாம் என்பது மத்திய அரசின் வாதம்.

இந்த சட்ட நகலை அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பிலான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மதம் தர வேண்டும்; ஆனால், இதற்கு இதுவரை சம்மதம் தெரிவிக்காததால், இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்ந்து விவாதித்து வருகிறது. இறுதி ஒப்புதலை இதுவரை தரவில்லை. கடந்த திங்கள் கிழமை அன்று குழு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் கூடியது. ஆனால், போதுமான உறுப்பினர்கள் பங்கேற்காததால் விவாதம் நடக்கவில்லை.

ஏற்கனவே நடந்த விவாதத்தின் அடிப்படையில், சட்ட நகல் தொடர்பாக நிலைக்குழுவின் நகல் அறிக்கை வெளியானது. போதுமான உறுப்பினர்கள் பங்கேற்காததால் இந்த நகல் அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. சட்டம் கொண்டு வர ஆட்சேபம் தெரிவித்து, அதில் உள்ள திருத்தங்கள், பல வகையில் தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற அதிருப்தியை நகல் அறிக்கையில் குழு தெரிவித்திருந்தது. குற்றம் சம்பந்தப்பட்டவர் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது புகார் வரும்போது, அவர்கள் பற்றிய முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்படும்.

அப்போது, புலனாய்வு துறையினரால் இதுவரை டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டுமானால், அதற்கு நீதிமன்றம் மூலம் தனி அனுமதி பெற வேண்டும். அப்படி பெற்றால் தான் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடியும். இந்த சட்டம் அமலுக்கு வந்து விட்டால், குற்றம் சம்பந்தப்பட்டவர்களின் நிறம், குணம், நோய் இருப்பின் விவரம், ரத்தம் பற்றிய தகவல்கள், சுகாதார தகவல்கள் என்று எல்லா விவரங்களும் டிஎன்ஏ மூலம் பெற்று, அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில், டிஜிட்டல் வடிவில் பதிவு செய்து பாதுகாக்க முடியும்.

‘இப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களின் தகவல்கள் பெறுவதில் இப்போதுள்ள நடைமுறை போதுமானது; மாறாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் என்று வழக்கு சம்பந்தப்பட்ட அனைவரின் டிஎன்ஏ சாம்பிள்களை சேமித்து வைப்பது என்பது பெரும் தவறுக்கு வழிவகுக்கும். சாதி, சமூக ரீதியாக பட்டியல் எடுக்கவும், அதன் மூலம் அரசியல் ரீதியாக தவறுகளை செய்யவும் வழிவகுக்கும்; அரசியல் ஆதாயங்களை பெற இந்த சட்டம் ஆளும் கட்சிக்கு உதவும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதனால் இந்த சட்டம் கொண்டுவரும் முன்பு இன்னும் ஆலோசனை நடத்த வேண்டும். இந்தியா போன்ற நாடுகளுக்கு இதுபோன்ற சட்டம் தேவையில்லை’ என்று நாடாளுமன்ற குழு தன் கருத்தை தெரிவித்து நகல் அறிக்கை தயார் செய்தது.

இந்த அறிக்கையை அமைச்சகத்துக்கு அனுப்பலாம் என்று திங்கள் அன்று கூட்டம் நடத்தப்பட்டது: ஆனால், போதுமான உறுப்பினர்கள் வராததால் நகல் அறிக்கை மீது ஆலோசனை நடத்தி, இறுதி வடிவம் கொடுக்க முடியவில்லை என்பதால் கூட்டம் எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது; மீண்டும் அடுத்த கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படலாம். குழுவில் பாஜ உறுப்பினர்கள் அதிகம் இருப்பின் நகல் அறிக்கை நிராகரிக்கப்படலாம். அதன் மூலம் சட்ட நகல் ஒப்புதல் பெறப்பட்டு, வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

60 நாடுகளில் அமல்
* டிஎன்ஏ ஒழுங்குமுறை சட்டம் பற்றி 15 ஆண்டுகளாகவே பேச்சு இருந்து வருகிறது. இதுவரை ஆட்சியில் இருந்த யாரும் அதை கொண்டு வர முயற்சிக்கவில்ைல. காரணம், சிக்கல் இருப்பதால் தான்.
* தீவிரவாதத்தை ஒழிக்க டிஎன்ஏ சட்டம் முக்கியம் என்று ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, 1994ல் முதன் முதலில் அமெரிக்கா கொண்டு வந்தது.
* அதன் பின், பிரிட்டன், பிரான்ஸ் உட்பட 60 நாடுகளில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
* இந்தியாவில் இதுவரை சட்டம்  திருத்தப்படவில்லை. சர்வதேச அளவில் தீவிரவாதிகளை ஒழிக்க டிஎன்ஏ சட்டம் வலுவாக்குவது முக்கியம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

* டிஎன்ஏ - ஒரு விளக்கம்
டிஆக்சி ரிபோ நியூக்ளிக் ஆசிட் - இதன் சுருக்கம் தான் டிஎன்ஏ. மரபணு என்று தமிழில் சொல்லப்படுகிறது; ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் டிஎன்ஏ இருக்காது; வெள்ளை அணுக்களில்தான் அதிகம் உள்ளது. மூன்று வகை டிஎன்ஏ உண்டு. இவற்றில் இருந்து மரபணு கண்டறியப்பட்டு, அதன் மூலம் ஒருவரின் உடல் நிலை, அவர் நிறம், குணம் எல்லாம் கண்டறியலாம். ஏன், மரபணுவை வைத்து அதே மாதிரி இன்னொரு குழந்தையை கூட பிறக்க வைக்கலாம் என்பது தான் மருத்துவ நிபுணர்கள் கருத்து.

Tags : government ,Parliamentary Standing Committee , Federal Government, Next Astra, Genetic Law, New Danger, Caste, Socially, Opportunity, Parliamentary Standing Committee, Warning
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...