கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே, காயரம்பேடு பிரதான சாலையை பல ஆண்டுகளாக அதிகாரிகள் பராமரித்து, சீரமைக்காததால், குண்டும் குழியுமாக மாறி, சேறும் சகதியுமாக கிடக்கிறது. இதனால், வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி, பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் தொடங்கி, சென்னை திருச்சி - தேசிய நெடுஞ்சாலை மறைமலைநகர் ஜிஎஸ்டி சாலையில் காயரம்பேடு பிரதான சாலை முடிவடைகிறது. சாலையில் கடம்பூர், களிவந்தபட்டு உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. காயரம்பேட்டில் இந்து கடம்பூர் வரை சுமார் 3 கிமீ சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது.
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பராமரிக்காமல் விட்டதால், தற்போது லேசான மழைக்கே பெய்தாலே சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. தற்போது, விட்டு விட்டு பெய்து வரும் மழையால் காயரம்பேடு பிரதான சாலை சேறும், சகதியுமாக மாறி, பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்களில் சிக்கி கடும் சிரமம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் உடனடியாக, மேற்கண்ட சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.