தமிழக அரசை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் ஆர்.டி.ஒ அலுவலகம் அருகே, தமிழக அரசை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகம் ஆட்டோ டிரைவர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசை கண்டித்து மதுராந்தகம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்டோ சங்க செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் கிருஷ்ணராஜ், வட்டார தலைவர்கள் ரமேஷ், இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகங்களில் எப்சிக்கு வரும் ஆட்டோ உரிமையாளர்கள், நேரடியாக அதிகாரிகளை அணுக முடியாமல் புரோக்கர்கள் மூலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதேபோன்று, புதிய விதிகளைகாட்டி ஆட்டோக்களில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்பதை பயன்படுத்தி, ஸ்டிக்கர் ஒட்டுபவரின் சான்றிதழ் கேட்பதால், அவர்கள் அதிக வசூல் வேட்டை செய்கின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர்கள், முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுராந்தகம், கருங்குழி, மேலவலம்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, அவர்கள் மதுராந்தகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் சென்றனர்.

Related Stories:

>